
புதுச்சேரி: புதுச்சேரியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம்
வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் 4 கிலோ அரிசி, ரொக்கத்தொகை
விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள்
மூடப்பட்டுள்ளதால், மத்தியக் கல்வித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி
புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல்
8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசியும், உணவுப்பாதுகாப்பு
ஊக்கத்தொகையும் வரும் வாரத்திலிருந்து வழங்கப்பட உள்ளது.
1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்திய உணவுக் கழகத்தின் 4 கிலோ
அரிசி மற்றும் வகுப்புகள் வாயிலாக ரூ.290 முதல் ரூ.390 வரை ரொக்கமாக
வழங்கப்படும். பள்ளிகளில் அரிசி மற்றும் ரொக்கத்தொகை வழங்கும்போது சமூக
இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
அவர்களுக்கு பள்ளியில் மானியத்தை பயன்படுத்தி சானிடைசர் வழங்கப்பட
வேண்டும். மாணவர்களின் ஆதார் கார்டு அல்லது ரேஷன் கார்டை பெற்றோர்கள்
அல்லது மாணவர்கள் கொண்டுவர வேண்டும். ணவர்களுக்கு அரிசி மற்றும்
ரொக்கத்தொகை வழங்கிய பிறகு, அதன் விவரங்களைக் கணக்கெடுப்புத் தாளில்
குறித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.