ஜெனிவா: 'கொரோனா தடுப்பூசியை அடுத்தாண்டு பிற்பகுதி வரை எதிர்ப்பார்க்க
வேண்டாம்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று உலகை
ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியும் பணிகள்
பல்வேறு நாடுகளில் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது. முதல் நாடாக
தடுப்பூசியை கண்டறிந்ததாக அறிவித்த, 'ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 தடுப்பூசி
பாதுகாப்பானது தான்' என, லான்செட் மருத்துவ இதழில் ஆய்வு முடிவுகள்
வெளிவந்துள்ளன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர்
மார்கரெட் ஹாரிஸ் தெரிவித்துள்ளதாவது:கணிசமான எண்ணிக்கையிலான கொரோனா
தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையில் இருப்பதை வரவேற்கிறோம்.
இது பொதுவாக கோடிக்கணக்கான மக்களை உள்ளடக்கியது. ஆனால்
எதார்த்தமான காலக்கெடுவைப் பொறுத்தவரை, அடுத்த ஆண்டு பிற்பகுதி வரை பரவலான
தடுப்பூசி போடுவதை நாங்கள் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. அதற்குள்
தடுப்பூசியை மக்கள் எதிர்பார்க்க வேண்டாம். கொரோனா தொற்றுக்கு வேகமாக பரவி
வரும் சூழலில், பாதுகாப்பான மற்றும் பயனுள்ளதாக நிரூபிக்கப்படாத ஒரு
தடுப்பூசியை, நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம். இவ்வாறு அவர்
கூறினார். கொரோனா தொற்றால் மோசமான பாதிப்புக்குள்ளாகி இருக்கும்
அமெரிக்காவில், நவ., 3ம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்,
'கொரோனா தடுப்பூசி வெளியிடப்படும்' என, அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.







