ஒரே ஒரு பழம் சாப்பிட்டுப் பசி போக்க வேண்டுமென்றால், பலரது தேர்வு பலாப்பழமாகவே இருக்கும். அந்த அளவுக்குப் பெரும்பசி என்று நினைத்துவிடக் கூடாது. சுளைகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கும் பலாவுக்கு ஈடாக, வேறெந்த பழமும் எளிதில் பசியாற்ற முடியாது என்பதே இதற்குக் காரணம். இது செரிமானம் ஆக நேரம் பிடிக்கும் என்பது இன்னொரு காரணம்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இது தோன்றியதாகக் கருதப்படுகிறது. இதில் புரதம், மாவுச் சத்து, நார்ச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மக்னீஷியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின், கரோட்டின், தயாமின், ரிபோப்ளோவின், நியாசின் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துகள் உள்ளன. பலாவில் இருக்கும் ப்ரக்டோஸ், சுக்ரோஸ் ஆகியன இதற்கு இனிப்புச் சுவையை அளிக்கிறது.
நெய், தேன் சேர்த்தால்..
பலாப்பழத்துடன் தேன், நெய், வெல்லம், பனங்கற்கண்டு போன்ற பொருட்களைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் நலமுறும். பலாச்சுளையை நெய்யில் வதக்கிச் சாப்பிடலாம். காலைப் பொழுதில் தேனில் சுளைகளை ஊறவைத்து அதனுடன் நெய் சேர்த்து, மாலையில் அவற்றை எடுத்துச் சாப்பிட்டால் மனமும் உடலும் புத்துணர்வை அடையும்.
கிராமங்களில் பலா நன்கு பழுக்காமல் இருந்தால், சுளைகளை வெல்லத்தோடு சேர்த்துச் சாப்பிடும் பழக்கம் உள்ளது. பலாச் சுளையுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானக் கோளாறுகள் தீரும். இருமல் கட்டுப்படும். நாக்கு வறண்டுவிடுவது நிற்கும். இதில் இருக்கும் பொட்டாசியம் குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதய நோயாளிகளுக்கு இது ஒரு அருமருந்து.
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து!
பலாவில் இருக்கும் வைட்டமின் ஏ பார்வைக் கோளாறுகளைத் தடுக்கும். மாலைக்கண் நோய் இருப்பவர்கள் இதனைச் சாப்பிட்டால் பாதிப்பு குறையும். மக்னீஷியம், கால்சியம் சத்துக்கள் காரணமாக, எலும்புகள் வலுவாக பலாப்பழம் உதவுகிறது. இதனால் வளரும் குழந்தைகள் இதனைக் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும். இது ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்துகிறது. இதனால் ரத்த சோகை பாதிப்பு மட்டுப்படுகிறது.
பலாப்பழத்தில் இருக்கும் நார்ச் சத்து மலச்சிக்கலைப் போக்கும். பெருங்குடலைச் சுத்தம் செய்ய உதவும். குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க பலா உண்பது அவசியம். இதில் இருக்கும் வேதிப்பொருட்கள் உடல் முதுமையடையாமல் தடுக்கின்றன. அதோடு, புற்றுநோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுவதாகவும் உள்ளன. செரிமானக் கோளாறுகள், வயிற்றுப் புண் போன்றவற்றைக் குணப்படுத்த பலாப்பழம் பயன்படுத்தப்படுகிறது.
தலை பாரம் தீரும்!
இதில் இருக்கும் தாமிரம் உடலில் தைராய்டு சுரப்பிகளால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைத் தடுத்து சீர் செய்கிறது. பலாவில் இருக்கும் வைட்டமின் ஏ, தலைமுடி உதிர்தல், இளநரை, பொடுகு பிரச்சனைகளை எளிதில் தீர்க்கிறது. ஆனால், இவற்றை அளவுக்கு மீறிச் சாப்பிடக் கூடாது. அவ்வாறு செய்யும்போது வயிற்று வலி, அஜீரணம் போன்றவை ஏற்படும்.
பலாப் பழத்தில் உள்ள சுளைகளைப் போலவே, அதனுள் இருக்கும் கொட்டைகளையும் சமைத்துச் சாப்பிடும் வழக்கம் நம்மவர்களிடையே உள்ளது. வாயுத் தொல்லை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றுக்கு இது ஒரு நல்ல தீர்வு. இதேபோல பலாப் பிஞ்சை சமைத்துச் சாப்பிடுவது பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. இதனால் மூளை வளர்ச்சி வலுவாகும்.








