
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படும் என அஞ்சப்படும் நிலையில், விதிகளை முறையாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்க முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், முக்கியமாக சென்னை, கோவை, சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாஸ்க் அணிவது கட்டாயம் என்றாலும் கூட பொது விழாக்கள் , திருமணங்கள் , கோவில் விழாக்கள் என பல இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவதில்லை என்று குறிப்பிட்டுள்ள தலைமைச் செயலாளர், விதிகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அபராதமும், தண்டனையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க கூடாது என்றும், மழைக்காலம் அதைத் தொடர்ந்து குளிர்காலம் வருவதால் மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.









