
உலகின் கொடிய நோய்களில் முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க நேரம் கிடைக்கும்.
ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போகும் அபாயம் உண்டு. இருப்பினும் மாரடைப்பு ஒருவருக்கு வரப்போவதை சில அறிகுறிகளை வைத்து முன்னரே கணிக்க முடியும்.
நிறைய பேருக்கு மாரடைப்பு அறிகுறிகள் தெரிவதில்லை. அதிலும் திடீர் மாரடைப்பு உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. எனவே அதை கவனமாக அறிந்து சிகிச்சை மேற்கொள்வது அவசியம்
எனவே மாரடைப்பு வருவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகளை நாம் என்னென்ன என்று அறிந்து கொள்வோம்.
- நீங்கள் உடற்பயிற்சி செய்த பிறகு அல்லது படிக்கட்டுகளில் ஏறிச் சென்ற பிறகு சுவாசத்தை பெறுவதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறீர்கள் என்றால் அது அடைபட்ட அல்லது தடுக்கப்பட்ட தமனிகளின் அறிகுறியாக இருக்கலாம். இது சில நாட்களில் மாரடைப்புக்கு வழி வகுக்கும்.
- இதயத்திற்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டம் இல்லாததால் நீங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடும்போது உங்கள் இதயத்திற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் இதயம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால் சின்ன வேளை செய்தால் கூட உங்களுக்கு அதிகப்படியாக வியர்க்க ஆரம்பிக்கும்.
- உங்கள் தமனி அடைப்பட்டு இருந்தால் அல்லது மாரடைப்பு ஏற்பட்டால் மார்பில் வலி, இறுக்கம் அல்லது அழுத்தத்தை உணரலாம்.இந்த இறுக்க உணர்வு பொதுவாக சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். நீங்கள் ஓய்வில் இருக்கும்போது அல்லது உடல் ரீதியாக ஏதாவது செய்யும்போது இது நிகழலாம்.நாள்பட்ட மார்பு வலி இல்லாமல் கூட மாரடைப்பு நிகழலாம்.
- உங்கள் இதயம் சரியாக செயல்படாதபோது, செரிமான மண்டலத்திற்கு இரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம். இது இரைப்பை குடல் பிடிப்புகள் மற்றும் குமட்டல் போன்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். வாந்தி அல்லது செரிமான உணர்திறனுடன் நீங்கள் குளிர் வியர்வை மற்றும் தலைச்சுற்றலை போன்றவை ஏற்படலாம். இந்த அறிகுறிகள் தமனிகள் அடைப்பட்டு இருப்பதை காட்டுகிறது. இது காலப்போக்கில் மாரடைப்பை உண்டாக்கும்.
- திடீரென்று சோர்வு அல்லது மூச்சு வாங்குவதை நீங்கள் உணர்ந்தால் உடனே உங்கள் மருத்துவரை சந்தியுங்கள். அதிக சோர்வு அல்லது விவரிக்கப்படாத பலவீனம், சில நேரங்களில் உங்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்தலாம்.
- நீங்கள் பதட்டமாக அல்லது உற்சாகமாக இருக்கும்போது உங்கள் இதயத் துடிப்பு தாறுமாறாக இருப்பது இயல்பானது. ஆனால் சில நொடிகளுக்கு மேல் உங்கள் இதயம் வேகமாக துடிப்பதைப் போல நீங்கள் உணர்ந்தால் அது அடிக்கடி நடந்தால் உங்க மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
குறிப்பு
முன்கூட்டியே அறிகுறிகளை கண்டறிவது அடைபட்ட தமனிகளின் சிகிச்சையை மேம்படுத்துவதோடு மாரடைப்பு ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.








