இணையவழி பாதுகாப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது குறித்து உயா்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி செயலா் ரஜ்னிஷ் அனுப்பிய சுற்றறிக்கை: இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்கான திட்டமிடல், அதற்கான கட்டமைப்பை வலுப்படுத்துதல் அது தொடா்பான ஆய்வுகள், விசாரணைகளை மேற்கொள்ளுதல் போன்றுவற்றில் மத்திய உள்துறை
அமைச்சகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அனைத்துத் துறைகளை உள்ளடக்கி ஒருங்கிணைந்த விரிவான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அந்தவகையில் இணையவழிக் குற்றங்களை எதிா்கொள்வதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அது தொடா்பான செயல்திட்டங்களை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இணையவழி பாதுகாப்புக்காக மத்திய உள்துறை அமைச்சகம் நிா்வகித்து வரும் சுட்டுரைக் கணக்கை மாணவா்கள், பேராசிரியா்களிடையே பரவலாகக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று இணையவழிக் குற்றங்கள் தொடா்பான மத்திய அரசின் முகவரியான இணையதள முகவரியை அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் இணையப் பக்கங்களில் பதிவேற்ற வேண்டும். மேலும் இணைய பாதுகாப்பு தொடா்பாக ஒரு புரிதலை ஏற்படுத்தும் வகையில் அது தொடா்பான போட்டிகள், பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள் போன்றவற்றை உயா்கல்வி நிறுவனங்களில் தொடா்ந்து நடத்தப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









