ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி
ஆசிரியர்களுக்கு, ஓராண்டாக சம்பளம் வழங்கவில்லை.தமிழகத்தில் குழந்தை
தொழிலாளர்களாக மீட்கப்படும் குழந்தைகள், சிறப்பு பள்ளிகளில்
சேர்க்கப்பட்டு, கல்வி பயில செய்கின்றனர். இதன்படி ஈரோடு, நீலகிரி
உள்ளிட்ட, 17 மாவட்டங்களில் சிறப்பு பள்ளி செயல்படுகிறது. ஈரோடு
மாவட்டத்தில் கடம்பூர் மலைப்பகுதி குன்றி, டி.என்.பாளையம் பகுதியில்
விளாங்கோம்பை, பர்கூர் அக்னிபாவி, கொங்காடை, சத்தியில் கொத்துக்காடு உட்பட,
15 இடங்களில் இப்பள்ளிகள் செயல்படுகின்றன. மத்திய அரசின் தொழிலாளர் நல
அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இப்பள்ளிகளை தொண்டு நிறுவனங்கள்
நிர்வகிக்கின்றன. இப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம், 7,000 ரூபாய் சம்பளமாக
மத்திய அரசும், மாநில அரசு சார்பில் ஊக்கத்தொகையாக, 500 ரூபாய்
வழங்கப்படுகிறது.
கடந்தாண்டு பிப்., மாதம் முதல் இவர்களுக்கு சம்பளம்
வழங்கப்படவில்லை. இப்பள்ளிகளை நடத்தி வரும், சுடர் தொண்டு நிறுவன இயக்குனர்
நடராஜ் கூறியதாவது: கொரோனா காரணமாக ஊதியம் நிறுத்தப்பட்டதா அல்லது வேறு
காரணமா? என தெரியவில்லை. இதனால் ஆசிரியர்கள் பொருளாதார ரீதியாக சிரமத்தில்
உள்ளனர்.
கடந்த பிப்., முதல் தற்போது வரை, சம்பள நிலுவையை
முழுமையாக வழங்க வேண்டும். இதுபோன்ற ஆசிரியர்கள் வேறு பணிக்கு
சென்றுவிட்டால், மீண்டும் மலைப்பகுதியில் கிடைப்பது சிரமம். மாணவர்களுக்கு
நல்ல கல்வி வழங்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.









