தமிழகத்தில்
உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 23ம் தேதி முதல்
செப்டம்பர் 3ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என கல்லூரிக் கல்வி
இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களில் சேர்வதற்காக 3
லட்சம் மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம்
பதிவேற்றியுள்ளனர். தர வரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 17ம் தேதி
வெளியிடப்பட்டது. இதை அந்தந்த கல்லூரி முதல்வர்கள் பதிவிறக்கம் செய்து,
மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் பெற்ற மதிப்பெண்களையும் அரசுத்
தேர்வுத்துறையின் மூலம் சரிபார்த்து அதன் உண்மைத் தன்மையின் அடிப்படையில்
மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும், தவறு கண்டுபிடிக்கப்பட்டால் அந்த மாணவரின்
சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும். மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை
சரிபார்த்து கல்லூரியின் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்.
கொரோனா
தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஆன்லைன் அல்லது நேரடியாகவும்
சேர்க்கையை நடத்தலாம். அப்போது இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட
வேண்டும். இந்த சேர்க்கை 23ம் தேதி முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை நடத்த
வேண்டும். இது தொடர்பான விவரங்களை எஸ்எம்எஸ், இமெயில் மூலம் மாணவர்களுக்கு
தெரிவிக்க வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்
தேதி பின்னர் அறிவிக்கப்படும். மாணவர்கள் ஒரு பாடப்பிரிவுக்கு
விண்ணப்பித்து இருந்து, அந்த பாடப் பிரிவு நிரம்பிவிட்டால் வேறு
பாடப்பிரிவில் விதிகளை பின்பற்றி சேர்க்கலாம். மாணவர்களுக்கு கணினிப்
பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியில்சேர ஊக்குவித்து அந்த
பயிற்சியை கல்லூரிகளில் நடத்த வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர்
தெரிவித்துள்ளார்.