பள்ளிக் கல்வித்துறையும்
****************************
மண்டல அளவிலான ஆய்வும்
*********************************
பலனளித்ததா? என்பதை ஆணையர் அவர்கள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 

1. கடந்த கல்வி ஆண்டில், கொரோணா தணிந்த காலத்தில் மண்டல ஆய்வு நடைபெற்றது.‌ 2022 (மார்ச்-ஏப்ரல்) இதில் இவர்கள் கண்ட முன்னேற்றம் என்ன? ஆய்வின் நோக்கம் என்ன? 

2. 1-3 வகுப்புகளில் எண்ணறிவு எழுத்தறிவு முழுமை பெற வேண்டும்.‌ அடுத்து 4-5 வகுப்புகளில் கணித  அறிவியல் செயல்பாடுகள், ஆங்கில மொழி அறிமுகம். இதனை ஆசிரியர்கள் செய்தார்களா? என்பதை ஆய்வு செய்வதுதான் மண்டல ஆய்வு. 
  
3. இதில் யாரும் மாற்றுக் கருத்து கொள்ள முடியாது. ஆனால் கடந்த முறை நடந்த மண்டல ஆய்வில் கண்டது என்ன? எந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை ஆணையர்தான் சொல்ல  வேண்டும். 

4. இரண்டாம் பத்தியில் உள்ள செய்தி என்பது தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பில்லை. நகர்புற குழந்தைகள் வாகனங்களை கணக்கிடுவதில், அடையாளம் காண்பதில் வல்லவர்களாக‌ இருப்பார்கள். சிக்னலை கவனித்து செல்வதில் பயிற்சி  பெற்றிருப்பார்கள்.  ஆனால் மாவட்டந்தோறும் குறிப்பாக கிராமப்புற, வட்டார அளவிலான குழந்தைகளுக்கு  மேற்படியான சூழல் அமையுமா? 

5. ஆனால் அனைவருக்கும் பொதுவான சுற்றறிக்கை வெளியிடப்படுவது ஏற்புடையதா? 

6. ஒவ்வொரு ஆசிரியரும் Lesson Plan தயாரிக்க வேண்டும் என்பது சரியான ஒன்றுதான். ஆனால் ஆசிரியர் - குழந்தைகள் உறவில், கற்றல் - கற்பித்தல்- கற்றல் என்ற முக்கோண உறவு முறை (தூண்டல்- துலங்கல்- தூண்டல்)  தமிழகத்தில்  சுமூகமாக நடந்தேறி வருகிறதா?  இதனை கண்காணிக்க இயலாத ஆணையரகம்,  மேற்படியான ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் தனித்தனியே ஆவணங்களை தயார் செய்திட  வேண்டுமென ஆசிரியர்களை  நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல. 

7. காரணம், 5 வகுப்புகளுக்கும் ஒரே ஒரு ஆசிரியர். 6-8 வரை பாடத்திற்கு  ஏற்ப ஆசிரியர் இல்லாமல் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் என இருப்பதும், போதுமான உள்கட்டுமானங்கள் இல்லாமல் இருப்பதும், குறிப்பாக கழிவறை இல்லாமல் இருப்பதும் ஆணையரின் விருப்பத்தை நிறைவேற்றுமா?  

8. ஆணையரின் நோக்கத்தை நிறைவேற்ற SMC என்ற ஒரு அமைப்பு உண்டு. அதனை பலப்படுத்துவதுதான் ஒரே வழி.‌ அதன் செயல்பாடுகளை ஊக்குவிக்க ஆணையர் நடவடிக்கை எடுத்தால் சரியாக இருக்கும். 

எழுதுவதற்கு நிறைய செய்திகள் இருந்தாலும்‌ நிறைவேற்றுவதற்கு ஆள் இல்லை. அமைப்பும்‌ இல்லை. 

இன்றைய ஆணையர் காலில் சக்கரம் கொண்டு சுழலுவார். அடுத்து வருபவர்? 
நிரந்தரமான அமைப்புகளை செயல்பட வைப்பதற்கு  அனைவரும் முயற்சிக்க வேண்டும். 

க. திருப்பதி, ஒருங்கிணைப்பாளர்,
அரசுப் பள்ளி பாதுகாப்பு இயக்கம்,
24- 08-2022.