சந்தேகத்திற்கிடமின்றி தினமும் நாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்க உள்ளுறுப்புகள் நன்றாக செயல்பட தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
மோசமான மற்றும் சுகாதாரமற்ற தண்ணீரை குடித்தால் அது பயனற்றது. அதீத மக்கள் தொகை, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் இயற்கை வளங்கள் அழிந்து வருவது உள்ளிட்ட பல காரணங்களால் சுத்தமான தண்ணீர் என்பது பெரும்பாலானோருக்கு சவாலாக உள்ளது. அசுத்தமான தண்ணீரைக் குடித்து தங்கள் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ள விரும்பவில்லை. சுகாதாரமற்ற தண்ணீரை குடித்தால் நோய்கள் உண்டாகும் என்பதால் தண்ணீரை சுத்தப்படுத்த மக்கள் பல நுட்பங்களை முயற்சி செய்கிறார்கள். இதில் தண்ணீரை கொதிக்க வைப்பது மற்றும் வடிகட்டுதல் அதாவது ஃபில்டர் செய்வது மிகவும் பிரபலமானவை.
ஆனால் ஜலதோஷம், டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்களைத் தடுக்க மருத்துவர்கள் கொதிக்க வைத்த தண்ணீரைக் குடிக்க பரிந்துரைக்கின்றனர். எனவே ஃபில்டர் செய்யப்பட்ட நீரின் அவசியத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. ஆனால் நீரின் தூய்மையை உறுதிப்படுத்த சிறந்த வழி எது.?
குழாய் தண்ணீர் குடிக்கலாமா.?
குழாயிலிருந்து நேராக வரும் தண்ணீர் குடிப்பதற்கு ஆரோக்கியமானது என நீங்கள் நினைத்தால் இது பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டும். நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படும் தண்ணீரில் இருக்கும் அசுத்தங்களை நீக்க மற்றும் பாக்டீரியாவை கொல்ல குளோரின் மற்றும் ஃப்ளோரைட் பயன்படுத்தப்படுகிறது. எனினும் நம் வீட்டை அடையும் தண்ணீர் குழாய்கள் சுத்தமாக இல்லாமல் இருக்கலாம். ஸ்டோரேஜ் மற்றும் ட்ரீட்மென்ட் பிளான்ட்களில் நீர் சேகரிக்கப்படும் போது தண்ணீர் அதிக அசுத்தமடையலாம். குடிநீரின் தரம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், நாடு முழுவதும் பாதுகாப்பான குடிநீரை வழங்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொதிக்க வைக்கும் நீரின் அவசியம்..
பாதுகாப்பான குடிநீரை பெறுவதற்கான முக்கிய வழி தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்துவது. இது பரவலாக நடைமுறையில் வீட்டு நீர் சுத்திகரிப்பு முறையாகும். நீரை கொதிக்க வைப்பதன் முக்கிய நோக்கம் அதில் இருக்கும் கிருமிகளை அழிப்பதே. ஆயினும் எவ்வளவு நேரம் தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும் என தெரியுமா.?
நீரில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை கிருமி நீக்கம் செய்ய, குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு தண்ணீரை தொடர்ந்து கொதிக்க வைக்க வேண்டும். இதை விட குறைவான நேரம் கொதிக்க வைக்கப்படும் தண்ணீர் குடிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல. கொதிக்க வைக்கும் செயல்முறை ஈயம், ஆர்சனிக், மெக்னீசியம் மற்றும் நைட்ரேட்டுகள் போன்ற அசுத்தங்களை கரைக்காது.
ஃபில்ட்டர் செய்யப்பட்ட தண்ணீர் குடிப்பது நல்லதா.?
கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீருடன் ஒப்பிடும் போது, சுத்திகரிக்கப்பட்ட ஃபில்ட்டர் தண்ணீர் குடிப்பதற்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அசுத்தமான அல்லது குழாய் நீரிலிருந்து அசுத்தங்கள், ரசாயனங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை அகற்ற ஒரு வாட்டர் ப்யூரிஃபையர் உதவும். RO முதல் UV வாட்டர் ப்யூரிஃபையர்ஸ் வரை, தண்ணீரைச் சுத்திகரித்து குடிக்க கூடியதாக மாற்ற உதவும் பல தொழில்நுட்பங்கள் உள்ளன. இது பாட்டில் தண்ணீரைச் சார்ந்திருப்பதையும் குறைக்கிறது.
பாதுகாப்பான தண்ணீரால் கிடைக்கும் நன்மைகள்:
பாதுகாப்பான தண்ணீரை குடிப்பதால் நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படுகிறது. வளர்சிதை மாற்றம், சரும ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பு செயல்முறையில் உதவுகிறது.
ஃபில்ட்டர் செய்யப்படாத நீரை குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்:
வடிகட்டப்படாத நீரில் ஜியார்டியா லாம்ப்லியா, கிரிப்டோஸ்போரிடியம் மற்றும் விப்ரியோ காலரா போன்ற ஆபத்தான நுண்ணுயிரிகள் இருக்க கூடும். இவை வயிற்றுப்போக்கு, செப்சிஸ், காலரா மற்றும் மரணம் போன்ற அபாயங்களுக்கு வழிவகுக்கும்.
தண்ணீரை சுத்திகரிக்க உதவும் பிற வழிகள்..
தண்ணீரை சுத்திகரிக்க டிஸ்டிலேஷன் மற்றும் குளோரினேஷன் உள்ளிட்ட வேறு சில வழிகளும் உள்ளன. டிஸ்டிலேஷன் முறையில், நீரை ஆவியாக்கும் கொதிநிலையை அடையும் வரை மட்டுமே நீர் வெப்ப மூலத்திற்கு உட்படுத்தப்படுகிறது. அதுவே குளோரினேஷனில், கிருமிகள், ஒட்டுண்ணிகள் அல்லது பாக்டீரியாக்களை அழிக்க சுத்திகரிக்கப்படாத தண்ணீரில் குளோரின் மாத்திரைகள் அல்லது திரவ குளோரின் சேர்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த முறையை கவனமாகப் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் இது தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதிக்கலாம்.