முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய அறிவுரை:
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு
விண்ணப்பித்தவர்களில் 62 ஆயிரம் பேர் இன்னும் ஹால் டிக்கெட்டைப்
பதிவிறக்கம் செய்யவில்லை.இவர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து
தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை விரைவில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்
என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை
21) நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்காக 1.67 லட்சம் பேர்
விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஜூலை 2-ஆம் தேதி
பதிவேற்றம் செய்யப்பட்டது.
ஆனால், திங்கள்கிழமை (ஜூலை 15) மாலை வரை ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் மட்டுமே தங்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
போட்டித் தேர்வு வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள்
உடனடியாக தங்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
அப்போதுதான், ஹால் டிக்கெட்டுகளில் உள்ள விவரங்கள் மற்றும் தேர்வு மையங்கள்
ஆகியவற்றை தேர்வர்கள் முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்ள முடியும் என
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தாலோ அல்லது
ஹால் டிக்கெட்டில் உள்ள தகவல்கள் குறித்து விளக்கம் தேவைப்பட்டாலோ அவர்கள்
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை
அணுகலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கு
இந்தப் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக 422 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான ஏற்பாடுகள் ஏறத்தாழ நிறைவடைந்துள்ளன.








