(TET)ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைக்க வலியுறுத்தல்:
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும், வெயிட்டேஜ்
மதிப்பெண் வழங்கும் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என சமூக நீதி
பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான
ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்த சமூக நீதி பாதுகாப்பு
மாநாடு மற்றும் கருத்தரங்கம்
வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திராவிடர் கழகத்
தலைவர் கி.வீரமணி மாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.
இந்த மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது:
தமிழகத்தில் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஆசிரியர் தகுதித்
தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என
அறிவிக்கப்பட்டுள்ளது சமூக நீதிக்கு எதிரானது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு,
பிற்படுத்தப்பட்டோருக்கு என தனித்தனி மதிப்பெண் தரவுகள் 13 மாநிலங்களில்
அமல்படுத்தப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் 40 சதவீத
மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் செயல்படுத்தும்போது தமிழகத்தில் ஏன் இதை பின்பற்றக் கூடாது என்றார்.
இந்த மாநாட்டில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் க.பொன்முடி பேசியது:
சமூக நீதிக்கு ஆபத்து இல்லாத காலகட்டம் கிடையாது. தமிழக அரசு இப்போது
இடஒதுக்கீட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறது. டாக்டர்கள்,
பொறியாளர்களுக்கு தகுதித் தேர்வு இல்லாதபோது ஆசிரியர்களுக்கு மட்டும்
தகுதித் தேர்வு எதற்கு என்றார்.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ்
கஜேந்திரபாபு: இடஒதுக்கீடு என்பது வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு
பிரதிநிதித்துவம் வழங்குவது. ஆனால், ஆசிரியர் நியமனத்தில் தமிழக அரசு
அந்தப் பிரதிநிதித்துவத்தை மறுக்கும் செயலைச் செய்கிறது. ஆசிரியர் தகுதித்
தேர்வில் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கு அந்தந்த மாநில அரசுகளே
தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தும் அனைத்துத் தரப்பினருக்கும் ஒரே தேர்ச்சி மதிப்பெண்ணை மாநில அரசு
நிர்ணயித்துள்ளது.
அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவீதம் என ஒரே தேர்ச்சி மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் அரசாணை எண் 181-ஐ திருத்த வேண்டும்.
அதேபோல், இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் ஆசிரியர் நியமனத்துக்கான
வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் அரசாணை எண் 252-ஐ திரும்பப் பெற வேண்டும்
என்றார்.
திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்,
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கனகராஜ், தமிழ்நாடு
மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தீபக்,
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் மீனாட்சி
சுந்தரம், வழக்குரைஞர் அருள்மொழி, பேராசிரியர் தேவா உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.








