பிரச்னைகளை தீர்க்காததால் பி.இ.டி., ஆசிரியர் உண்ணாவிரதம்-நாளிதழ்செய்திகள்:
சாதாரண பிரச்னைகளை தீர்ப்பதற்குக் கூட அதிகாரிகள் முன் வராததால், 10ம் தேதி, மாநில அளவில், உண்ணாவிரத போராட்டம் நடத்த, உடற்கல்வி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது, உடற்கல்வி ஆசிரியர்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ளது.
மேலும், சம்பந்தமே இல்லாமல், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு,
கணிதத் தேர்வு நடத்தும் முறையை கைவிட வேண்டும் என்றும்
வலியுறுத்துகின்றனர். 1985ல், பள்ளிகளில் உள்ள விளையாட்டு நிதியை கையாளும்
பொறுப்பு, உடற்கல்வி ஆசிரியர்களிடம் இருந்தது. அதனால், மாவட்ட உடற்கல்வி
ஆய்வாளர் பணிக்கு வருபவர்கள், கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற
நிலை இருந்தது.
தற்போது, பள்ளி தலைமை ஆசிரியர்களின் கீழ், அனைத்து
பொறுப்புகளும் வந்துவிட்டன. இந்த நிலையிலும், கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும் எனவும், இதை காரணம் காட்டி, பதவி உயர்வு வழங்க மறுப்பதும், எந்த
வகையில் நியாயம் என, உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எந்த பிரச்னைகளும் தீர்க்கப்படாததால், உடற்கல்வி
ஆசிரியர்கள், மாநில அளவில், வரும் 10ம் தேதி, சென்னை, சேப்பாக்கம்
விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.







