இயற்கை விவசாயத்துக்கு எதிராக விவசாயக் கல்வி: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கவலை:
தமிழகத்தில், இயற்கை விவசாயத்துக்கு எதிராக விவசாயக் கல்வி கற்பிக்கப்படுகிறது என, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.ஈரோடு வ.உ.சி., பூங்காவில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது:
"இந்தியாவில், 28 சதவீதம் பேர், அதாவது 32 கோடி பேருக்கு
சரியான உணவு கிடைப்பதில்லை. நாடு முழுவதும் தரிசு நிலங்களின் எண்ணிக்கை
அதிகரித்துக் கொண்டே உள்ளது. அரசாங்கம், அரிசியும், கோதுமையும் தவிர எந்த
உணவுப் பொருட்களையும் தருவதில்லை.
கேழ்வரகு, கம்பு, சோளம், கொள்ளு, ராகி உள்ளிட்ட
தானியங்களின் உற்பத்தியும் வெகுவாக குறைந்துவிட்டது. அதனால், மக்களுக்கு
சரிவிகித உணவு கிடைக்காமல், பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.
தானிய வளர்ச்சிக்காக வயல்களில், உரமாகவும், பூச்சிக்கொல்லி
மருந்துகளால், மனிதனுக்கு புற்றுநோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்கள்
பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி, நொய்யல், வாய்க்கால்கள், அமராவதி உள்ளிட்ட
நீராதாரங்களில் கழிவுநீர், சாயக்கழிவு, தோல்கழிவுகள் கலக்கப்படுவதால்,
தமிழகத்திலேயே, ஈரோடு மாவட்டத்தில் தான், அதிகமான மக்கள் புற்றுநோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வுகள் கூறுகின்றன.
விவசாயக் கல்வியில் மிகப்பெரிய மூடத்தனம் நடந்து வருகிறது.
இயற்கை விவசாயத்துக்கு எதிராக, மிகப்பெரிய மோசடி வேலைகள் நடக்கிறது. நாடு
வளர்கிறது என அரசாங்கம் சொல்கிறது. ஆனால், விவசாயிகளின் தற்கொலை
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இயற்கையாக தூங்க வேண்டிய மனிதன், கொசு கடிப்பதால்,
மின்விசிறியை கட்டாயம் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான்.
அதனால், மின்சாரத்தின் தேவை அதிகரிக்கிறது. கொசுவை கட்டுப்படுத்த
கோடிக்கணக்கில் முதலீடு செய்து மின்சாரம் தயாரிக்க வேண்டியுள்ளது.
வயல்களில் உற்பத்தியாகிற கொசுக்களை சாப்பிட,
தட்டாம்பூச்சிகள் உள்ளது. ஆனால், வயல்களுக்கு மருந்து அடிப்பதால்,
தட்டாம்பூச்சி இனம் அழிந்து கொண்டிருக்கிறது. அதனால், கொசு உற்பத்தி
அதிகமாகியுள்ளது. விவசாயத்துக்கு எதிராக செயல்படும் அரசாங்கத்தை மாற்ற
வேண்டும், அல்லது நாம் மாறவேண்டும்," என்றார்.







