வீட்டு செல்லப் பிராணிகள்- குழந்தைகளின் தோழர்கள்:
நமது குழந்தைகளுக்கு நகர வாழ்க்கை என்பது, விளையாட்டு மற்றும் உற்சாகம்
குறைந்த ஒன்றாக இருக்கிறது. மேலும், பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு
சென்றால், நிலைமை இன்னும் மோசம்.இதுபோன்ற ஒரு சூழலில், வீட்டில்
செல்ல பிராணி வளர்ப்பது, குழந்தைகளுக்கான பெரிய பொழுதுபோக்கு அம்சமாகவும்,
மனதிற்கு மகிழ்வைத் தரும் விஷயமாகவும் இருக்கிறது.
இதன்மூலம், அவர்களின் மன அழுத்தமும் குறைகிறது. வீட்டில் வளர்க்கும்
செல்லப் பிராணிகள், குழந்தைகளுக்கும், நமது குடும்பத்திற்கும் எந்த
மாதிரியான நேர்மறையான விளைவுகளை அளிக்கின்றன என்பதை இங்கு பார்க்கலாம்.
* மிருகங்களின் உலகம் மிகவும் சிறியது. அதுவும், வீட்டில்
வளர்க்கப்படும் நாய் போன்ற செல்லப் பிராணிகள், மனிதர்களை அதிகம்
எதிர்பார்ப்பவை. அவை மனிதர்களிடமிருந்து, கவனிப்பையும் அன்பையும்
எதிர்பார்க்கின்றன. அதேசமயம், அவை தன்னை வளர்த்து உணவளிப்பவர்களுக்கு
காட்டும் பதில் மரியாதையும், அன்பும் தனி ரகம். அதிலும், நாய்கள் அதில்
மிகவும் முக்கியமானவை.
* செல்ல குட்டி நாய்கள், நம் செல்ல குழந்தைகளுக்கு காட்டும் அன்பானது,
நம் குழந்தைகளை அளப்பரிய மகிழ்ச்சிக்கு இட்டு செல்கிறது. குழந்தைகளின்
சிறந்த நண்பனாக வீட்டு வளர்ப்பு நாய்கள் திகழ்கின்றன. குழந்தைகளுக்கு
மட்டுமல்ல, பெரியவர்களுக்கும்தான்.
* செல்ல விலங்குகள், குழந்தைகளுக்கு பொறுப்புணர்வைக் கற்றுத் தருகின்றன.
இதன்மூலம், பொறுப்பின்மையால் ஏற்படும் பின்விளைவுகள் குழந்தைகளுக்கு
தெரியவருகிறது. உதாரணமாக, உங்கள் குழந்தை, செல்லப் பிராணிக்கு உணவளிக்க
மறந்துவிட்டால், அதனால், அந்த செல்லப்பிராணி படும் துன்பத்தை நேரடியாக
உணர்ந்து, உங்கள் குழந்தை பொறுப்புணர்வைக் கற்றுக்கொள்கிறது.
* வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணியை கவனித்துக் கொள்ளுதல்,
அதற்கு உணவளித்தல் மற்றும் அதற்கு தேவையான அனைத்தையும் செய்தல் உள்ளிட்ட
செயல்கள், உங்கள் குழந்தைக்கு தன்னம்பிக்கையை அளிப்பதாக உள்ளன.
* இன்றைய யுகம் எலக்ட்ரானிக் யுகம். நகர்ப்புற குழந்தைகள் பலரும்,
வீடியோ கேம் உள்ளிட்ட எலக்ட்ரானிக் விளையாட்டுகளில் மூழ்கி கிடக்கிறார்கள்.
அவர்கள், உயிருள்ள அம்சங்களைவிட, உயிரற்ற அம்சங்களுடன்தான் அதிகநேரம்
செலவிடுகிறார்கள். செல்போன் விளையாட்டுகள், லேப்டாப் விளையாட்டுகள் போன்றவை
வெகு பிரபலம். இதனால், அவர்களின் மூளை தேவையான வளர்ச்சியின்றி ஒரு தேக்க
நிலையை அடைகிறது. மன பாதிப்புகள் மட்டுமின்றி, உடல்ரீதியான பல
பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
எனவே, இந்த சூழலில், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், உங்கள்
குழந்தைகளை, அத்தகைய எலக்ட்ரானிக் உபகரணங்களை விட்டு அகலுமாறு செய்து,
அவர்களை ஓடியாடி விளையாட வைக்கிறது. நன்றாக சிரிக்க வைக்கிறது மற்றும்
அவர்களுக்கு ஒரு உயிர்ப்புள்ள அனுபவத்தை தருகிறது. இதன்மூலம்,
மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் உங்களின் குழந்தை பெரியளவு நன்மையடைகிறது.
* பிற உயிர்களின் மீது அன்பு செலுத்த வேண்டுமென்பது ஒரு மானுட தத்துவம்.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளால், உங்களின் குழந்தை, நடைமுறை
ரீதியில் அந்த உயரிய மானுட பாடத்தைக் கற்றுக்கொள்கிறது.
கவனிக்க வேண்டியவை
வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் பல சுகாதார அம்சங்களும்
அடங்கியுள்ளன என்பதை மறக்கலாகாது. தற்போதைய காலங்களில், பல குழந்தைகள்,
ஆஸ்துமா பிரச்சினைகளுடன் பிறக்கின்றன. அதுபோன்ற நிலையில், வீட்டில்
வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளின் உரோம மயிர்களால், அந்தப் பிரச்சினை
மேலும் தீவிரமாகும்.
செல்லப் பிராணிகளுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளை உடனடியாக
கவனிப்பது மிகவும் முக்கியம். நாய் உள்ளிட்டவைகளுக்கு ஏதேனும் சில
காரணங்களால் வெறி பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
செல்லப் பிராணிகளுக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுகையில், அலட்சியமாக
இருக்காமல், அவற்றை உடனடியாக, அருகிலுள்ள தனியார் அல்லது அரசு கால்நடை
மருத்துவமனைகளுக்கு கொண்டுசென்று, முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
இல்லையேல், நமது செல்லப் பிராணியை இழக்க நேரிடும்.
மேலும், உங்களின் குழந்தை, செல்ல நாய் அல்லது பூனையுடன் விளையாடுகையில்,
எதிர்பாராத விதமாக, அவற்றின் பற்கள் பட்டு, குழந்தைக்கு ரத்தக் காயம்
ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, அதுபோன்ற சூழல்களில், உடனடியாக
மருத்துவமனைக்குச் சென்று சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இல்லையெனில், நிலைமை விபரீதமாகிவிடும்.
எந்த விஷயத்திலும், எப்போதும் கவனமாக இருந்தால்தான் நம் வாழ்வையும், நம் குழந்தைகளின் வாழ்வையும் சிறப்பாக பேண முடியும்.