எண்ணும் எழுத்தும் கண்கள்:உலக எழுத்தறிவு தினம்:
ஒரு மொழியில் புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே
எழுத்தறிவு பெற்றவர். கல்விக்கு எழுத்தறிவு அடிப்படையாக இருக்கிறது. இது
ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான் ஜனநாயகத்தில் உரிமைகளை
நிலைநாட்ட முடியும். சமூக, பொருளாதார மற்றும் மனித முன்னேற்றத்திற்கும் இது
அவசியம்.
எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின்
கடமை, கட்டாயம். உலகில் இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும்
எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, செப்.,8ம் தேதி உலக எழுத்தறிவு
தினம் கடைபிடிக்கப்படுகிறது. 21ம் நூற்றாண்டின் எழுத்தறிவு என்பது
இந்தாண்டு தினத்தின் மையக்கருத்து.
எழுத்தறிவு அடிப்படைக் கல்வியின் இருதயமாக உள்ளது. எழுத்தறிவு பெறுவதன்
மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகைப் பெருக்கம்,
வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க
முடியும். எழுத்தறிவு மூலம் அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்த
முடியும். எழுத்தறிவு பெற்ற பெற்றோர், குழந்தைகள் பள்ளிக்கு அனுப்ப தயங்க
மாட்டார்கள்.
உலகளவில், 15 வயதுக்குட்பட்டோர் எண்ணிக்கையில், 77 கோடியே 40 லட்சம்
பேரும், 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களில், 12 கோடியே 30 லட்சம் பேரும்
எழுத்தறிவு அற்றவர்கள். உலகில் எழுத்தறிவு பெறாதவர்களில், மூன்றில் 2
பங்கு பேர் பெண்கள்.
2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் எழுத்தறிவு 74 சதவீதமாக
உள்ளது. இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். இது 2001ம்
ஆண்டு கணக்கெடுப்பை விட 9.2 சதவீதம் அதிகம். தமிழக எழுத்தறிவு சதவீதம் 80.4
சதவீதமாக உள்ளது. இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 6.9 சதவீதம் அதிகம்.
எழுத்தறிவு சதவீதத்தில், இந்தியாவிலேயே கேரளா முதலிடத்தில் உள்ளது.
இப்பட்டியலில், தமிழகம் (80.33%) 14வது இடத்தில் உள்ளது. பீகார் (63.82%)
கடைசி இடத்தில் உள்ளது.







