
ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் உண்டு.
இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய
மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய்
வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும். ஒரு உயிர் படும் துன்பத்தை
கண்டு அதனை தாங்கிக்கொள்ளாமல் உடனே ஓடிச் சென்று உதவுவது தான் தொண்டு.
அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நம் நாட்டு மக்களுக்கு
செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை,
அறியாமை, சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய
கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் வாழும் மக்கள்
மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள்
சமுதாய மேம்பாட்டுக்காகத் தொண்டாற்றுவது கடமையாகும்.
மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு உரிய மனப்பான்மை
வளர்த்து கொள்ளவேண்டும். குறிப்பாக தெருக்களை தூய்மையாக வைக்க உதவவேண்டும்.
மேலும் நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ
உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல்,
தவறிய பொருட்களை தேடி கண்டுபிடிக்க உதவுதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள்
மேற்கொள்ளலாம்.
எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை கற்றுக்கொடுக்கலாம். செய்திதாள்களை
வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள், படிப்பகங்கள் அமைக்க ஏற்பாடு
செய்யவேண்டும். அரசின் செய்தித்துறையினர் உதவி கொண்டு வேளாண்மை,
குடும்பநலம், நோய்த்தடுப்பு முதலியன பற்றிய குறும்படங்களை பொதுமக்களிடம்
காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
மாணவர்கள் அருகேயுள்ள கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்
குறித்து விளக்கி கூறலாம். அதில் வேளாண்மை திட்டங்களில் அரசின் உதவி
பெறுதல், விவசாயிகள் ஓய்வு நேரத்தில் கோழிப்பண்ணைகள், தேனீக்கள் வளர்த்தல்,
பாய் பின்னுதல் உள்ளிட்ட தொழில்கள் செய்வது குறித்து அறிவுரைகளை
வழங்கலாம்.
கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது
குறித்து அரசுக்கு கோரிக்கை வைக்க உதவலாம். நகர்புறங்களில் போக்குவரத்து
நெரிசலை சீரமைக்க மாணவர்கள் போலீசாருக்கு உதவிட முன்வரவேண்டும். பள்ளியில்
மாணவர்கள் வகுப்பறையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள
வேண்டும். ஏழை மாணவர்களுக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கும்
உதவவேண்டும்.
ஒழுக்கம் தவறும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கு
ஆண்டு இறுதியில் புத்தகங்களை இலவசமாக கொடுத்து உதவ வேண்டும். புயல்,
வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலத்தில் அவற்றால் பாதிக்கும் மக்களுக்கு உதவிட
வேண்டும். சுகாதார சீர்கேட்டால் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்க மக்களிடம்
போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாட்டுக்கும், வீட்டுக்கும்
பெருமை சேர்க்கும் வகையில் நல்ல மாணவர்களாக உருவாக வேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...