தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்:
பேருந்திலும், ரயிலிலும் பயணிக்கும் நாமே பல நேரங்களில் போக்குவரத்து நெரிசல் குறித்தும், கால தாமதம் குறித்தும் வெறுப்படைகிறோம்.
ஆனால், கேரள மாநிலத்தில், ஒரு ஆசிரியர் தினமும் கழுத்தளவு ஆழம் உள்ள
ஆற்றில் நீந்தி பள்ளிக்குச் சென்று பாடம் நடத்தி விட்டு, மீண்டும் ஆற்றில்
நீந்தி வீட்டுக்கு திரும்பி வருகிறார்.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளியில் பணியாற்றும்
அப்துல் மாலிக் (40) என்ற
ஆசிரியர், தினமும் காலை 9 மணிக்கு தனது உடமைகளை
பாலிதீன் கவரில் போட்டு எடுத்துக் கொண்டு, காற்று நிரப்பப்பட் டயர்
ட்யூப்பை நெஞ்சுப் பகுதியில் போட்டுக் கொண்டு ஆற்றில் இறங்குகிறார். சுமார்
15 நிமிடம் நீந்தி மறு கரையை அடைந்து, உடைகளை அணிந்து கொண்டு பள்ளிக்குச்
செல்கிறார். மீண்டும் மாலையில் இதே முறையில் வீட்டுக்கு திரும்புகிறார்.
இது பற்றி அவரிடம் கேட்டால், எனது வீட்டில் இருந்து பள்ளிக்கு இந்த
ஆற்றை சுற்றிக் கொண்டு செல்ல 12 கி.மீ. தூரம் உள்ளது. அந்த தூரத்தை நான்
பேருந்தில் சென்றால் உரிய நேரத்துக்கு பள்ளிக்குச் செல்ல இயலாது. எனவே தான்
இந்த வழியை கண்டுபிடித்தேன் என்கிறார் சிரித்துக் கொண்டே.
சுமார் 20 ஆண்டுகளாக இந்த முறையில்தான் இவர் பள்ளிக்குச் சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








