டுயூட்டோரியல் மையங்களில் சேர்ந்தாலே தேர்ச்சி?
எஸ்.எஸ்.எல்.ஸி., தனித் தேர்வு எழுத, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் படித்ததாக போலிச்சான்று கொடுத்த 21 மாணவர்களை பிடித்து விருத்தாச்சலம் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்கள் தனித் தேர்வு எழுத கல்வித்துறை அனுமதியளித்துள்ளது. அதன்படி, தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், "டுட்டோரியல்" மையத்துக்குச் சென்று படிக்கின்றனர்.
வரும் அக்டோபர் மாதம், எஸ்.எஸ்.எல்.ஸி., தனித் தேர்வு
துவங்குவதால், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், அந்தந்த கல்வி
மாவட்டத்தில், தேர்வு எழுத விண்ணப்பம் செய்து வருகின்றனர். இந்நிலையில்,
நேற்று முன்தினம், ஆத்தூர் தலைவாசல் பகுதியை சேர்ந்த 200 பேர்
விருத்தாச்சலம் கல்வி மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேன்களில்
சென்றனர்.
அதில், 21 பேர் விண்ணப்பங்களுடன் இருந்த மதிப்பெண்
சான்றுகளை, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். விசாரணையில், சேலம்
மாவட்டம் ஆத்தூர் தலைவாசல் பகுதியை சேர்ந்த மாணவர்கள் என்பதும், இவர்கள்,
கடலூர், விருத்தாச்சலம், வேப்பூர் பகுதியில் படித்தாக, "போலி" மதிப்பெண்
சான்று பெற்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து, மாணவர்கள் 21 பேரும் ஆத்தூர், தலைவாசலில் உள்ள
இரண்டு டுட்டோரியல் மையத்தில் பாடத்துக்கு 4,000 முதல் 12,000 ரூபாய் வரை
கொடுத்து படித்ததாக, கல்வித்துறை அதிகாரிகளிடம், ஒப்புதல் கடிதம் எழுதிக்
கொடுத்தனர். மீதம் உள்ள மாணவர்கள் விண்ணப்பம் வழங்காமல், வேனில் திரும்பிச்
சென்றதாக கூறப்படுகிறது.
எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் பிளஸ் 2வில் தோல்வியடைந்த
நிலையில், ஆத்தூர், தலைவாசலில் உள்ள இரு டுட்டோரியல் மையங்களில் சேர்ந்தாலே
தேர்ச்சி செய்து கொடுப்பதாக, அந்த மையத்தின் ஆசிரியர்கள், விளம்பரம்
செய்து வந்ததாக கூறப்படுகிறது.
விளம்பரத்தை பார்த்து வரும் மாணவர்களை, விழுப்புரம், கடலூர்
தேர்வு மையங்களில், ஒன்றாக தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி செய்வதற்காக,
"கவனிப்பு" பணிகள் மேற்கொண்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.
டுட்டோரியல் மைய ஆசிரியர்கள் சிலர் 300க்கும்
மேற்பட்டேருக்கு போலி மதிப்பெண் சான்று கொடுத்து, மோசடி செய்துள்ளதாகவும்
கூறப்படுகிறது. சம்மந்தப்பட்ட டுட்டோரியல் மைய ஆசிரியர்களிடம், விசாரணை
நடத்தினால் பல உண்மைகள் தெரியவரும்.
எனவே, விழுப்புரம், கடலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்
ஆத்தூர், தலைவாசல் பகுதியில் உள்ள, டுட்டோரியல் மைய ஆசிரியர்களிடம்,
போலீஸார் மூலம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.