இந்தியாவின் பலம் எது? கோவையில் கலாம் பேச்சு:
அனைத்து சக்திகளை விடவும், உயர்ந்த சக்தியான இளைஞர்கள், இந்தியாவில் இருப்பதே நம் நாட்டுக்கு பலம்" என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.லீட் இன்டியா 2020 பவுண்டேஷன் சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, கோவையில் நேற்று முன்தினம் நடந்தது. கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், லீட் இந்தியா 2020 பவுண்டேஷன் கோவை மண்டலத் தலைவர் சுவாமிநாதன் வரவேற்றார்.
இதில், "உன் அரும்பெரும் லட்சியம், நாளைய வரலாற்றை உருவாக்கும்" எனும் தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:
உண்மைக்கும், நேர்மைக்கும் எடுத்துக் காட்டாக மாணவர்கள் இருக்க
வேண்டும். வாழ்க்கையில் ஒவ்வொரு மாணவனின் லட்சியம் மிகவும் பெரியதாக
இருப்பது அவசியம். மாணவர்கள் சிறு லட்சியத்தை கொண்டிருந்தால், அது மிகப்
பெரிய குற்றமாகும். உயர்ந்த எண்ணம், தொடர்ந்து அறிவை வளர்த்தல்,
விடாமுயற்சி, பிரச்னைகளை கையாளும் திறன் உள்ளிட்டவற்றை வளர்த்துக் கொண்டால்
வெற்றி பெறலாம்.
இளைய சமுதாயத்தினருக்கு தவறான சிந்தனைகள் வராமல் பார்த்துக் கொள்ள
வேண்டும். ஊழல் மனப்பான்மை இருக்கக் கூடாது. இளைய சமுதாயத்தினர் தங்கள்
லட்சியம் வெற்றி பெற கனவு காண வேண்டும். இந்தியாவில் இளை ஞர் கள் அதிகளவு
இருப்பது நாட்டுக்கு பலம். அனைத்து சக்திகளை விடவும் இளைஞர்கள் சக்தியே
உயர்ந்தது.
தினமும் அரை மணி நேரமாவது படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக்
கொள்ள வேண்டும்.இவ்வாறு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.







