தனியார் பள்ளி கட்டண நிர்ணயம்: பெற்றோர் நலச் சங்கம் வேண்டுகோள்:
தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும்போது
பெற்றோர்களின் தரப்பையும் கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு மாணவர் பெற்றோர்
நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.இந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் அதன் தலைவர் எஸ். அருமைநாதன் தலைமையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
தனியார் பள்ளிகளுக்குக் கட்டணத்தை நிர்ணயிக்கும்போது அந்தப் பள்ளிகளிடம்
அடிப்படை வசதி போன்றவை குறித்து கேட்கப்படுகிறது. இந்த வசதிகள் உள்ளனவா என
பெற்றோரிடம் கருத்து கேட்பதில்லை. இது சரியல்ல. எனவே, பெற்றோரின்
கருத்தையும் கேட்ட பிறகே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, பிறந்தது முதல் 18
வயதுவரை உள்ள அனைவருக்கும் இலவசக் கல்வியை அரசின் முழு பொறுப்பிலும்,
செலவிலும் அருகில் உள்ள பொதுப்பள்ளிகள் மூலமாக வழங்க வேண்டும். இதற்கான
நடவடிக்கையை மத்திய அரசும், மாநில அரசும் மேற்கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்குத் தாய்மொழிவழி கல்விதான் சிறந்தது என பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
எனவே, அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை பயிற்றுமொழியாக்குவதை அரசு கைவிட
வேண்டும். அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு
ஆங்கிலத்தையும் சிறப்பாகக் கற்றுத்தர வேண்டும்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத
இடஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள குழந்தைகளுக்கும் அரசுப் பள்ளிக்
குழந்தைகளுக்கு வழங்கப்படும் இலவச நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை
வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்டன.
பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.முத்துக்குமரன் இந்தக்
கூட்டத்தைத் தொடங்கிவைத்தார். பீமாராவ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் இதில்
பங்கேற்றனர்.