கல்வியை விட சிறந்த ஆயுதம் எதுவுமில்லை - மலாலா :
கல்வியை விட சிறந்த ஆயுதம் எதுவுமில்லை. அறிவைப்
பெருக்க புத்தகத்தை விட சிறந்த கருவி எதுவுமில்லை என்று பிர்மிங்ஹாமில்
நடைபெற்ற நூலகத் திறப்பு விழாவில் சர்வதே குழந்தைகள் அமைதிப் பரிசைப் பெற்ற
மலாலா யூசுப்சாய் பேசினார்.பாகிஸ்தானில் பெண் கல்விக்கு ஆதரவு
தெரிவித்துப் பேசிய 16 வயது பள்ளி மாணவி மலாலா, தலிபான்களால்
துப்பாக்கியால் சுடப்பட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண்கல்விக்கு ஆதரவாக
உலகம் முழுவதுமிருந்து ஆதரவுக் குரல்கள் எழுந்தன. இதனிடையே, குண்டடி
பட்டதில் படுகாயமடைந்த மலாலா லண்டனில் உள்ள எலிசபெத் மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்ட சிகிச்சையளிக்கப்பட்டார். ஒருவார கால மருத்துவ
சிகிச்சைக்குப் பின்னர் பூரண உடல் நலத்துடன் அவர் வீடு
திரும்பினார்.பின்னர், பெண் கல்வியை ஊக்குவிக்கத் தொடர்ந்து போராடப் போவதாக
தெரிவித்தார். மேலும், இங்கிலாந்தின் இதயத்துடிப்பு இடமான பிர்மிங்ஹாம்
நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் மலாலா, அங்குள்ள எட்க்பாஸ்டன்
பள்ளியில் படித்து வருகிறார்.
இவரது பெயரில் நிதி திரட்டப்பட்டு, அதன் மூலம் பெண்
கல்வியை ஊக்குவிக்கும் பணியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொதுநூலகம் பிர்மிங்ஹாமில்
கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நூலகக்
கட்டிடத்தை மலாலா திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இந்த நகரம்
எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதேபோன்று இந்த நகரத்திற்கும் என்னை மிகவும்
பிடித்துள்ளது. இவ்வுலகில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட கல்வியை விட
சிறந்த ஆயுதம் எதுவுமில்லை. எழுத்தும் மற்றும் புத்தகத்தின் மூலமே
தீவிரவாதத்தை வேரறுக்க முடியும். எனவே, குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை
வழங்க பாடுபட வேண்டும் என்று பேசினார்.189 மில்லியன் பவுண்ட் செலவில்
கட்டப்பட்ட இந்த நூலகத்தில் உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களான வில்லியம்
ஷேக்ஸ்பியர் போன்றோரின் முதல்பதிப்பு நூல்கள் மற்றும் பல்வேறு அறிஞர்களின்
புத்தகங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.இந்த ஆண்டு
வழங்கப்படவுள்ள நோபல் பரிசு விழாவில், அமைதிக்கான நோபல் பரிசு பட்டியலில்
மலாலா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மலாலா சர்வதேச குழந்தைகள்
அமைதிக்கான விருதும், டிப்பெரேரி சர்வதேச அமைதி விருதும்
வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது







