கடல்சார் பட்டப்படிப்புக்கு தடை நீக்கம்: அமைச்சர் வாசன் தகவல்:
கடல்சார் பட்டப் படிப்புக்கு இருந்து வரும் தடை விலக்கி கொள்ளப்படுகிறது. பட்டப் படிப்பு, நான்கு ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கு, புது அங்கீகாரம் வழங்கப்படும்" என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.தூத்துக்குடியில், கடல்சார் பயிற்சி நிறுவன துவக்க விழா நடந்தது. 50 கோடி ரூபாயில், பயிற்சி மைய கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அவர் பேசியதாவது:
இங்கு, 40 மாணவர்கள் படிக்கும் வகையில், பயிற்சி மையம் துவக்கப்படும்.
நுணுக்கங்களை உள்ளடக்கிய, பெரிய கப்பல்களை கையாளுவதற்கான பயிற்சியை,
மாணவர்கள் பெற வேண்டும். உலகத்தில் உள்ள மொத்த மாலுமிகளில், 7 சதவீதம் பேர்
இந்தியர்கள்; இதை, 9 சதவீதமாக உயர்த்தும் திட்டம் உள்ளது.
கடல்சார் பயிற்சி துறை, தனியார் பங்களிப்புடன், 135க்கும் மேற்பட்ட
கல்வி நிறுவனங்கள் மூலம் செயல்படுகிறது. கடல்சார் பட்டப்படிப்புக்கான
நீண்டகால தடையை, கப்பல் துறை அமைச்சகம் விலக்கி கொள்கிறது; கடல்சார்
அறிவியல் பட்டப் படிப்பு, பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு, புது
அங்கீகாரம் வழங்கப்படும்.
கடல்சார் கல்வி நிறுவனங்களை தர வரிசைப்படுத்தவும், கண்காணிப்பு பணிகளை
மேற்கொள்ளவும், கால அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது. மும்பை கடல்சார் கல்வி
நிறுவனம், 1987ல் நிறுவப்பட்டது. இதில், 1.5 லட்சம் பேர் பயிற்சி
பெற்றுள்ளனர். இந்திய கப்பல் போக்குவரத்து கழக கப்பல்களில், தென்மாநில
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தூத்துக்குடி பயிற்சி மையத்தில்
படிக்க உள்ள, 40 மாணவர்களுக்கு, சிறப்பான பயிற்சி அளிக்க ஏற்பாடு
செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
முன்னதாக, நிர்வாகத் துறை இயக்குனர் அஸ்வனி குமார் வரவேற்றார். கப்பல்
போக்குவரத்துக் கழக தலைவர் பி.கே.மண்டல், செயலர் விஸ்வபதி திரிவேதி,
எம்.பி.,க்கள் ஜெயதுரை, ராமசுப்பு, வ.உ.சி., துறைமுக பொறுப்புக் கழக தலைவர்
நடராஜன், இயக்குனர் பி.பி.சின்ஹா பங்கேற்றனர்.







