மாணவர்களின் தேவையறிந்து அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்:
மாணவர்களின் தேவையறிந்து அரசுக்குத் தெரிவிக்க
வேண்டும் என்று உதவித் தொடக்கக் கல்வி அதிகாரிகளை உயர் கல்வி மற்றும்
பள்ளிக் கல்வி அமைச்சர் பி.பழனியப்பன் அறிவுறுத்தினார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம்
ஆகிய மாவட்டங்களில் உள்ள உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்
கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் பழனியப்பன் பேசியது:
அரசின் நலத்திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக செயல்படுத்தி,
குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் நீங்கள்
பணியாற்ற வேண்டும்.
பள்ளிகளில் அபாயகரமாக இருக்கும் மின்கம்பங்கள், பழுதடைந்த கட்டடங்கள்,
கிணறுகள் போன்றவற்றை அடையாளம் கண்டு, குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படா
வண்ணம் அவற்றை அகற்றவோ, மூடவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிக் குழந்தைகளை மழைக்காலங்களில் தொற்றுநோய்கள் தாக்காத வகையில்
தலைமையாசிரியர்களின் கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மலைப் பகுதி, சமவெளிப் பகுதி, கடற்கரைப் பகுதி போன்ற வேறுபட்ட
பகுதிகளில் வாழும் பள்ளிக் குழந்தைகளின் தேவைகளும் வேறுபடும். அத்தேவைகள்
என்னென்ன என்பதைக் கண்டறிந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் அரசுக்குத்
தெரிவிக்க வேண்டும் என்றார்.
பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா பேசுகையில், அரசின்
நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு முழுமையாகச் சென்றடைவதை உறுதிசெய்ய
அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அரசுப் பள்ளிகளில் அடுத்த
கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை, கற்றல்,
கற்பிக்கும் செயல்பாடுகள், பள்ளிகளின் தூய்மை போன்றவற்றுக்காக ஒவ்வொரு
மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மூன்று பள்ளிகளுக்கு கேடயங்களை
அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.
அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல்
கழக நிர்வாக இயக்குநர் சி.என். மகேஸ்வரன், தொடக்கக் கல்வி இயக்குநர்
ஆர்.இளங்கோவன், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர்
இதில் பங்கேற்றனர்.








