இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் வீழ்ச்சி:
கடந்த 2012-13ம் கல்வியாண்டின் படி, அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 3.5% அளவிற்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
2012-13ம் கல்வியாண்டில் மொத்தம் 96,754 மாணவர்கள் அமெரிக்காவில் படித்து வந்தார்கள். இதன்மூலம், முந்தைய ஆண்டைவிட, 3.5% எண்ணிக்கை சரிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில், சீனர்களை அடுத்து, இந்தியர்களே அதிகளவில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில், சீனா, இந்தியா மற்றும் தென்கொரிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே 49%.
இதில் தற்போது, சீனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேசமயம், இந்தியர்கள் மற்றும் தென்கொரியர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. சீன மாணவர்களின் எண்ணிக்கை 21% அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு முதல் இலக்காக இருப்பது அமெரிக்காதான். அதற்கடுத்து, பிரிட்டனும், ஆஸ்திரேலியாவும் வருகின்றன. ஆனால், தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதால், பலரின் வெளிநாட்டு கல்விக் கனவு கலைந்துள்ளது.