இந்திய உயர்கல்வி மற்றும் முதலீட்டு மேம்பாட்டிற்கு ஜப்பான் உதவி:
ஐதராபாத் ஐ.ஐ.டி., மற்றும் தமிழகத்தில் இன்வெஸ்ட்மென்ட் புரமோஷன் ப்ரோகிராம் ஆகியவற்றுக்காக, மொத்தம் ரூ.1,958 கோடியை ஜப்பான் அரசு ஒதுக்கியுள்ளது.இதற்கான ஒப்பந்தம், நிதி அமைச்சகத்தின் இணை செயலர் ராஜேஷ் குல்லாருக்கும், இந்தியாவிற்கான ஜப்பானிய தூதர் தகேஷி யாகிக்கும், டெல்லியில் கையெழுத்தானது.
மொத்த தொகையில், ரூ.1,129 கோடி, ஐ.ஐ.டி., ஐதராபாத்தின் இரண்டாம் கட்ட வளாக மேம்பாட்டிற்கும், ரூ.829 கோடி, தமிழ்நாடு இன்வெஸ்ட்மென்ட் புரமோஷன் ப்ரோகிராமுக்கும் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இன்வெஸ்ட்மென்ட் புரமோஷன் ப்ரோகிராமின் நோக்கம், தமிழகத்தை வெளிநாட்டு முதலீட்டிற்கான சிறப்பான உகந்த மாநிலமாக மாற்றுவதற்கான கொள்கை உருவாக்க நடவடிக்கையை ஆதரிப்பதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையில், சாலைகள், மின்சார விநியோகம், தண்ணீர் மற்றும் கழிவுநீர் கையாளும் நடவடிக்கையை மேம்படுத்துதல் ஆகியவற்றை, குறிப்பாக, தொழிற்சாலைகள் பயன்பெறும் வகையில் செயல்படுதலாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.







