இந்தியக் கல்வி மேம்பாட்டு மையம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அகில இந்திய அளவில் தொழில் நிறுவனங்களின் தரம் மேம்பாட்டு
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இந்தியத் தரம் மேம்பாட்டு மையத்தின் ஒரு
அங்கமான இந்தியக் கல்வித் தரம் மேம்பாட்டு மையத்தின் 16-ஆவது கருத்தரங்கில்
36 பள்ளி,கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று பல்வேறு ஆய்வு
அறிக்கைகள் சமர்ப்பித்தனர். அதைத் தொடர்ந்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கான
பரிசளிப்பு விழா ராமாபுரம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை
நடைபெற்றது. விழாவில், கல்பாக்கத்தை அடுத்த வெங்கம்பாக்கம் அரசு பள்ளியின்
9-ஆவது வகுப்பு மாணவர்கள் அளித்த பாடங்களில் கவனமின்மையும்,தீர்வும் என்ற
ஆய்வு அறிக்கைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் பாதுகாப்பும்,முதலுதவி குறித்த விழிப்புணர்வும் என்ற தலைப்பில்
6- ஆவது வகுப்பு மாணவர்கள் சமர்ப்பித்த இன்னொரு ஆய்வு அறிக்கைக்கும் பரிசு
வழங்கப்பட்டுள்ளது. இந்தியக் கல்வித்தரம் மேம்பாட்டு மையம் நிறுவனத் தலைவர்
பேராசிரியர் ஜெகதீசன், சென்னை கிளைத் தலைவர் ஏ.மயூரிநாதன்,செயல் இயக்குநர்
ஸ்ரீவத்சவா,அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.நாகராஜன்,ஈஸ்வரி பொறியியல்
கல்லூரி முதல்வர் எம்.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.








