சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு இலவச சீருடை மற்றும் காலணிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.இதுகுறித்து சென்னை மாநகராட்சி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தனியார் பள்ளிகளை விஞ்சிடும் வகையில் சென்னை மாநகராட்சியின் மழலையர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு இலவச சீருடை மற்றும் காலணிகள் வழங்கப்படும் என மாநகராட்சி பட்ஜெட்டில் (2013-2014) அறிவிக்கப்பட்டது.
அதன்படி அயனாவரம் வசந்தா தோட்டம் (மண்டலம்-6) சென்னை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இலவச சீருடை மற்றும் காலணிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில் 400 மழலையர் குழந்தைகளுக்கு இலவச சீருடை மற்றும் காலணிகளை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி வழங்கினார். அதைத்தொடர்ந்து அனைத்து மாநகராட்சி மழலையர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும் இலவச சீருடை மற்றும் காலணிகள் புதன்கிழமையன்றே வழங்கப்பட்டன.
தற்போது சென்னை மாநகராட்சியின் கீழ் 40 மழலையர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 3,100 குழந்தைகள் கல்வி பயிலுகின்றனர்.
கடந்தாண்டு ஜூனில் புதிதாகத் தொடங்கப்பட்ட 10 மழலையர் பள்ளிகளில் சுமார் 800 மழலையர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
மழலையர் பள்ளிகள் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக தற்போது தான் இலவச சீருடை மற்றும் காலணிகள் வழங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.







