தமிழ்நாட்டில் ஏப்ரல் 24-ந்தேதி
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந்தேதி (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தலும் அன்று நடைபெறுகிறது.
நாடு முழுவதும் உள்ள 81.4 கோடி வாக்காளர்கள் பங்கேற்கும் 9 கட்ட தேர்தல் முடிந்ததும், மே மாதம் 16-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஆந்திரா (தெலுங்கானா பிராந்தியம் உள்ளிட்ட), ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தப்படும் என்று, தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் அறிவித்தார்.
முதல் நாள் தேர்தல்
முதல் கட்ட தேர்தல் நாளான ஏப்ரல் 7-ந்தேதி அன்று 2 மாநிலங்களை சேர்ந்த 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 9-ந்தேதி நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில் 5 மாநிலங்களை சேர்ந்த 7 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும்.
3-வது நாளான ஏப்ரல் 10-ந்தேதி 14 மாநிலங்களில் உள்ள 92 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 12-ந்தேதி நடைபெறும் 4-வது நாள் தேர்தலில் 3 மாநிலங்களில் உள்ள 5 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும்.
ஒரே நாளில் 122 தொகுதிகள்
5-ம் கட்ட தேர்தல் நாளான ஏப்ரல் 17-ந்தேதி அன்றுதான் மிக அதிகபட்சமாக 13 மாநிலங்களை சேர்ந்த 122 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 6-வது நாளில், 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கு ஏப்ரல் 24-ந்தேதி தேர்தல் நடைபெறும்.
ஏப்ரல் 30-ந்தேதி நடைபெறும் 7-ம் நாள் தேர்தலில் 9 மாநிலங்களில் இடம்பெற்றுள்ள 89 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. 8-வது நாளான மே 7-ந்தேதி அன்று 7 மாநிலங்களை சேர்ந்த 64 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இறுதியாக மே 12-ந்தேதி நடைபெறும் 9-வது நாள் தேர்தலில் 3 மாநிலங்களில் இடம்பெற்றுள்ள 41 தொகுதிகளுக்கு ஒட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது.
உ.பி.யில் 6 கட்ட தேர்தல்
நாட்டிலேயே அதிக அளவில் 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் 6 கட்டங்களாக ஏப்ரல் 10, 17, 24, 30, மே 7 மற்றும் மே 12 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது.
இதே போல் பீகார் மாநிலத்திலும் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
42 தொகுதிகளை கொண்ட ஆந்திரா மாநிலத்தில் ஏப்ரல் 30 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
ஆந்திரா சட்டசபை தேர்தல்
ஆந்திராவில், அந்தந்த பாராளுமன்ற தொகுதிகளில் அடங்கி உள்ள சட்டமன்ற தொகுதிகளிலும் அதே நாளில் ஒட்டுப்பதிவு நடைபெறும்.
ஏப்ரல் 30-ந்தேதி அன்று தெலுங்கானா பிராந்தியத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 119 சட்டசபை தொகுதிகளுக்கும், மே 7-ந்தேதி அன்று சீமாந்திரா பிராந்தியத்தில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும்.
ஆந்திரா பிரிக்கப்பட்டு, புதிய மாநிலமாக தெலுங்கானா உருவாகி இருந்தாலும் ஏற்கனவே இருந்துவரும் நிலையிலேயே பாராளுமன்ற-சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று, தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் அறிவித்தார். பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது:-
தேர்தல் நடத்தை விதிமுறைகள்
“9 கட்டமாக தேர்தல் நடைபெற்றாலும், தேர்தல் நடைமுறைப்பணிகள் அனைத்தும் 72 நாட்களில் நடைபெற்று முடிந்துவிடும். இது கடந்த பாராளுமன்ற தேர்தல் நாட்களை விட 3 நாட்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
இந்திய ஜனநாயக வரலாற்றில் மற்றொரு முக்கிய மைல் கல்லாக அமையும் இந்த தேர்தலில், உயர்ந்த ஜனநாயக மாண்புகளை கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்”.
இவ்வாறு சம்பத் கூறினார்.
தமிழ்நாட்டில் மார்ச் 29-ல் வேட்பு மனு
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இந்த மாதம் (மார்ச்) 29-ந்தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள், ஏப்ரல் 5-ந்தேதி. வேட்பு மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 7-ந்தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள், ஏப்ரல் 9-ந்தேதி ஆகும்.
ஏப்ரல் 24-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். மே 16-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.








