ப்ளஸ் 2 தேர்வு நடந்து வரும் நிலையில், மெல்ல
கற்கும் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில், சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்
மூலம் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
தேர்வுத் துறை இயக்குனரகத்தின் சார்பில், ப்ளஸ்
2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில்,
அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் அதிக தேர்ச்சி மற்றும் முதலிடங்களை
கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த கல்வியாண்டில்,
மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விடைத்தாள்கள், மாணவர்களுக்கு
வழங்கப்பட்டு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
அதேபோல், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு என,
பள்ளி அளவில் பல்வேறு பருவ தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில், நாமக்கல்
மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும்
மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறுவதற்காக, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நாளை (17ம் தேதி)
வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு
நடப்பதால், அதில் தேர்ச்சியடைய மெல்ல கற்கும் மாணவருக்கு பயிற்சி வழங்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனால், மெல்ல கற்கும் மாணவர்களை, நேற்று (சனி)
மற்றும் இன்று (ஞாயிறு), சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் பள்ளிக்குச்
சென்று பாடங்களை நடத்தி, எழுத்துப் பயிற்சி வழங்கி வருகின்றனர்.
"அரசு பள்ளி மாணவர்கள், 100 சதவீத தேர்ச்சி
பெறுவதற்காக, விடுமுறை நாட்களில், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு, சிறப்பு
பயிற்சி வழங்கப்படுகிறது" என மேல்நிலைக் கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.