பிளஸ் 2 கணிதத் தேர்வு கடினமாக இருந்ததால்
அடுத்து வரும் உடனடி தேர்வில் அதிக மார்க் அள்ளும் நோக்கத்தில், தற்போதைய
விடைத்தாள்களை பேனாவால் அடித்து கொடுத்த 6 மாணவர்களின் நடவடிக்கை குறித்து
தேர்வுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறையினர் கூறினர்.
தமிழகத்தில் கடந்த 3ம் தேதி முதல் ப்ளஸ் 2
பொதுத் தேர்வு நடந்து வருகிறது. இன்ஜினியரிங் போன்ற தொழில் கல்வி படிப்பில்
சேருவதற்கான, "கட் ஆஃப்" மதிப்பெண் பெறுவதற்கு, கணிதம் முக்கிய இடம்
பெறுகிறது. ஆவலுடன் கணித பாடத்தேர்வுக்கு சென்ற மாணவர்களுக்கு,
எதிர்பார்த்தபடி கேள்வித்தாள் அமையவில்லை.
"பி" பிரிவில் 47ம் எண் கொண்ட கேள்வி தவறாக
கேட்கப்பட்டதாக, தகவல் வெளியானது. பல மாணவர்கள், பத்து மார்க்
கேள்விகளிலும், சூட்சகமாக கேட்கப்பட்டது தெரியாமல், திணறினர். அரசு பள்ளி
மாணவர்களுக்கு 14ம் தேதி நடந்த கணித தேர்வு கடினமாக அமைந்ததாகவும், தனியார்
பள்ளி மாணவர்கள் சிரத்தை எடுத்து பதில் அளித்தாகவும் கூறினர்.
அதேசமயம், தேர்வு எழுதும் மாணவர்கள், தில்லு
முல்லு வேலைகளில் ஈடுபடுவதும் உண்டு. விடைத் தாளின் சில பக்கங்களை
கிழித்து, எடுத்து சென்று விடுவதுண்டு. இப்பிரச்னையில், "விடைத்தாள்
கிழிக்கப்பட்டுள்ளதால், மார்க் வழங்க வேண்டும்" என, நீதிமன்றத்தில் வழக்கு
தொடரும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதில், விடைத்தாளை பெறும் தேர்வு
கண்காணிப்பாளர், தேர்வு துறையால் நடவடிக்கைக்கு ஆளாகிறார். ஆகவே, மாணவர்கள்
தேர்வு முடிந்து கொடுக்கும் விடைத்தாள்களை, நன்கு பரிசோதனை செய்தே
பெறுகின்றனர்.
ஈரோடு கல்வி மாவட்டத்தில், கணித தேர்வு
விடைத்தாள்களில், சில மாணவர்கள் தில்லுமுல்லு செய்தது
கண்டுபிடிக்கப்பட்டது. விடைத்தாள் முழுவதும் எழுதிய பின், பேனாவில் சில
பகுதியை அடித்து விட்டு, தேர்வு கண்காணிப்பாளரிடம் கொடுத்தனர். உஷாரான
கண்காணிப்பாளர்கள், விடைத்தாள் அடித்து இருப்பது குறித்து மாணவர்களிடம்
விளக்கம் கேட்டனர்.
"தற்போது, விடைத்தாள் கடினமாக வந்துள்ளது.
விடையை அடித்துவிட்டால், மார்க் குறையும். உடன், அடுத்த வரும் உடனடி தேர்வை
எழுதுவதற்காக வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இப்படி செய்தோம்" என, சிலர்
கூறியுள்ளனர்.
ஈரோடு சி.இ.ஓ., அய்யண்ணன் கூறியதாவது:ஆறு
மாணவர்கள், விடைத்தாளின் சில பகுதிகளை, பேனா மையால் அடித்து விட்டு,
ஒப்படைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவர்கள் கைப்பட, "நாங்களே இந்த தவறை
செய்தோம்" என்று எழுத்து மூலம் பெற்றபின், விடைத்தாள் பெறப்பட்டது.
இதுகுறித்து தேர்வுத்துறைக்கு, தகவல் கொடுத்துள்ளோம். இவ்வாறு
தெரிவித்தார்.