வருமானவரிச்
சலுகை, பிராவிடண்ட் ஃபண்டு (பி.எஃப்) மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம்
குறித்த வாசகர்களின் சந்தேகங்களுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள்
விளக்கம் அளித்துள்ளனர்.கேள்வி: எனது மனைவி தனது சொந்த
நிதியிலிருந்து (சேமிப்பு, வங்கி டெபாசிட், தனது தாயாரிடமிருந்து பெற்ற
வெகுமதிகள்) வீடு வாங்க விரும்புகிறார். தற்போது நாங்கள் வாடகை வீட்டில்
வசித்து வருவதால், நான் செலுத்தும் வாடகைக்காக வருமானவரிச் சலுகை பெற்று
வருகிறேன். எனது மனைவி சொந்தமாக வீடு வாங்கிய பிறகு நான் அவருக்கு மாத
வாடகைச் செலுத்தி அதன் பேரில் வருமானவரிச் சலுகை பெற முடியுமா?
பதில்
(சுதிர் கவுசிக், தலைமை நிதி அதிகாரி, டேக்ஸ்பேன்னர் டாட்காம்): கணவன்
மனைவிக்கோ அல்லது மனைவி கணவனுக்கோ செலுத்தும் வீட்டு வாடகைக்கு வருமானவரிச்
சலுகை கிடைக்குமா என்பது இதுநாள் வரை கேள்விக் குறியாக உள்ளது.மனைவிக்கு
செலுத்தும் வீட்டு வாடகைக்கு வரிச்சலுகை பெறலாம் என நீதிமன்றம்
(டிரிபுனல்) ஒன்று அண்மையில் தீர்ப்பளித்துள்ளது. இந்த சலுகையைப் பெறுபவர்
மனைவிக்கு சொந்தமான வீட்டில் வசிப்பவராகவும், அவருக்கு வாடகை
செலுத்துபவராகவும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.
வசிக்கும் வீடு மனைவிக்கு முழுவதும் சொந்தமாகவும், அவர் சொந்த
நிதியிலிருந்து வாங்கப் பட்டதாகவும் இருக்க வேண்டும். கணவன், மனைவி ஆகிய
இருவரும் சேர்ந்து வீட்டை வாங்கி இருந்தால் வீட்டு வாடகைக்கான வருமான வரிச்
சலுகை பெற முடியாது. நீங்கள் மனைவிக்கு மாதந்தோறும் தவறாது வாடகை செலுத்த
வேண்டும். இந்த வருமானத்தை மனைவி அவரது வருமானவரி கணக்கை தாக்கல்
செய்யும்போது குறிப்பிட வேண்டும்.இது தொடர்பாக வருமானவரிச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வரப்படும் வரை இந்த சலுகையை பெறுவதை தவிர்ப்பது நல்லது.கேள்வி:
நான் அண்மையில் வேறு நிறுவனத்தின் பணிக்கு மாறிய பிறகு எனது பிராவிடண்ட்
ஃபண்டு (பி.எஃப்.) தொகையை பெற விரும்பினேன். நான் உடனடியாக மாறியதால்
பி.எஃப். பணத்தை பெற முடியாது என்றும், தொகையை பணிபுரியும் நிறுவனத்துக்கு
மாற்ற வேண்டும் என்றும் நான் ஏற்கனவே பணிபுரிந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது சரிதானா?பதில் (ஜெயந்த் ஆர்.பை, தலைவர் (சந்தைப்படுத்துதல்)
பி.பி.எப்.ஏ.எஸ். மியூச்சுவல் பண்டு): சரிதான். ஒரு நிறுவனத்திலிருந்து
மற்றொரு நிறுவனத்துக்கு உடனடியாக மாறினால் பி.எஃப். பணத்தை பெற முடியாது.
வேலையில் இருந்து விலகி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் வேறு பணி
கிடைக்கவில்லையென்றால் பி.எஃப். பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.நீங்கள்
உடனடியாக வேறு நிறுவன பணிக்கு மாறியதால் மாறிய நிறுவனத்துக்குதான் உங்கள்
பி.எஃப். கணக்கை மாற்ற வேண்டும். இதன் பிறகு உங்களது குழந்தையின் கல்வி,
திருமணம், மருத்துவச் செலவு, புதிதாக வீடு வாங்குதல், கட்டுதல் போன்ற
தேவைகளுக்காக உங்களை பி.எஃப். பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றுக்
கொள்ளலாம்.கேள்வி: நான் காப்பீட்டு வசதி பெற விரும்புகிறேன்.
இழப்பீட்டு கோரிக்கைகளுக்கு அளிக்கப்படும் தீர்வு அடிப்படையில் நிறுவனத்தை
தேர்ந்தெடுக்கலாமா?பதில் (சுனில் சர்மா, தலைமை காப்பீட்டு கணக்கு
நிபுணர், கோட்டக் லைஃப் இன்சூரன்ஸ்): பணிபுரிபவர்கள் வீடு, கார்,
குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றிற்காக வங்கிகளிலிருந்து கடன்
வாங்குகின்றனர். இந்நிலையில், அவருக்கு திடீரென மரணம் ஏற்பட்டால் அவரை
நம்பி வாழும் குடும்பத்தினருக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படும்.இதற்காக
ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்திருந்தால் குடும்பத்தினருக்கு கடனை திரும்ப
செலுத்த அந்த திட்டம் உதவி புரியும். அவரைச் சார்ந்துள்ளவர்கள்
வருமானத்தில் தன்னிறைவு அடையும் வரை அவர்களுக்கு குறிப்பிட்ட வருவாய்
கிடைக்கும்.இழப்பீட்டு கோரிக்கைகளுக்கு வழங்கும் தீர்வின்
அடிப்படையில் காப்பீட்டு நிறுவனங்களை தேர்ந்தெடுக்கலாம். எல்லா
நிறுவனங்களும் இழப்பீட்டு தொகையை வழங்க விரும்புகின்றன. சில
வாடிக்கையாளர்கள் முழு விபரங்களையும் தெரிவிக்காமல் இருப்பதால் இழப்பீட்டு
தொகை கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.