கடந்த 2005–ம் ஆண்டுக்கு பிறகு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், நோட்டுக்கள் அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டு இருக்கும். ரூபாய் நோட்டின் பின்பக்கத்தில், கீழ்வரிசையின் மத்தியில், சிறிய அளவில் ஆண்டு எண் இடம்பெற்று இருக்கும். கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, இந்த பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால், 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அவை அச்சிடப்பட்ட ஆண்டு இருக்காது. இந்நிலையில், புழக்கத்தில் உள்ள, ஆண்டு எண் அச்சிடப்படாத அனைத்து வகை ரூபாய் நோட்டுகளையும் வாபஸ் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. இதை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதன்படி, 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட, ஆண்டு எண் இடம்பெறாத ரூ.500, ரூ.1,000 உள்பட அனைத்து ரூபாய் நோட்டுகளும், வருகிற மார்ச் 31–ந்தேதிக்கு பிறகு வாபஸ் பெறப்படுகின்றன. அதன் பிறகு அந்த நோட்டுகளை, வைத்து இருப்பவர்கள் அவற்றை ஏப்ரல் 1–ந்தேதி முதல், வங்கிகளில் கொடுத்து, வேறு நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். எந்த வங்கியிலும் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அனைத்து வங்கிகளும் இதற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. மேலும், ரூபாய் நோட்டுகளை மாற்ற ஜூலை 1–ம் தேதி வரையில் ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்தது.
தற்போது ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகள் மாற்றுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. அடுத்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு எந்த ஒரு சிரமத்தையும் ஏற்படுத்தா வண்ணம் ரூபாய் நோட்டியின் முழு மதிப்பையும் மற்றிக் கொடுக்க வசதிகளை செய்துக் கொடுக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.