ஆண்டுதோறும் நாட்டில் உள்ள கல்லூரிகளில் இருந்து
3.6 லட்சம் எம்பிஏ. மாணவர்கள் கல்வி பயின்று வெளியேறுகின்றனர் என
"அம்டெக்ஸ் சாப்ட்வேர்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மைதிலி
கூறினார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக ராமாபுரம் வளாகத்தில் உள்ள வணிக மேலாண்மைத்துறை சார்பில் அண்மையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் அவர் பேசியது: இந்தியாவெங்கும் வங்கிகள் சுமார் 1 லட்சம்
ஏ.டி.எம். மையங்களைத் திறந்துள்ளன. கடந்த ஆண்டில் 30 லட்சம் கார்கள்
விற்பனை செய்யப்பட்டுள்ளன. மொபைல் போன், சிம் கார்டு உபயோகிப்பாளர்களின்
எண்ணிக்கை 81.2 கோடியைத் தாண்டியுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி வருமானம்
உயர்ந்துள்ளது.
இவை அனைத்தும் மேலாண்மைக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தரும் சாதகமான நிலை.
நாட்டில் உள்ள 3 ஆயிரம் வணிக மேலாண்மைக் கல்லூரிகளில் இருந்து
ஆண்டுதோறும் சுமார் 3.6 லட்சம் எம்.பி.ஏ. மாணவர்கள் கல்வி பயின்று
வெளியேறுகின்றனர்.
இவர்களில் 10 சதவிகிதம் பேர் பெரிய தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
பெறுகின்றனர். 44 சதவிகிதம் பேர் நடுத்தர, சிறு நிறுவனங்களில்
வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.
தற்போது தொழில் நிறுவனங்கள் மேலாண்மைத்திறனுடன் கணினி தொடர்பான தகவல்
தொழில்நுட்பத் திறன் அறிந்த மாணவர்களைத் தேர்வு செய்வதில் அக்கறை
செலுத்துகின்றன.
எனவே மாணவர்கள் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக இயக்குனர் ஆர்.நாராயணசாமி, துணை முதல்வர்
எல்.அந்தோணி மைக்கேல்ராஜ், வணிக மேலாண்மைத்துறைத் தலைவர் சி.சுந்தர்,
ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பி.ஏ.மேரி ஆக்ஸில்லியா உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.