படிக்கச் செல்லும் நாடு, படிப்பின் வகை, படிப்பின் காலஅளவு மற்றும்
வாழ்க்கைச் செலவினம் ஆகியவற்றைப் பொறுத்து, வெளிநாட்டுக் கல்விக்கான மொத்த
செலவுகள் மாறுபடுகின்றன.
இவற்றில், செலவினத்தை
தீர்மானிக்கக் கூடிய மிக முக்கிய அம்சம், படிப்பிற்கான காலஅளவு.
அமெரிக்காவில் சென்று படிப்பவர்களுக்கு ஆகும் செலவு, பிற நாடுகளோடு
ஒப்பிடுகையில் அதிகமாகவே உள்ளது.
அமெரிக்காவில் 4 ஆண்டுகள் காலஅளவு கொண்ட ஒரு இளநிலைப் பட்டப் படிப்பை
மேற்கொள்ள செல்லும் ஒருவருக்கு, ஒரு ஆண்டிற்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.25
லட்சம் வரை செலவாகிறது. வாழ்க்கைச் செலவினங்களையும் உள்ளடக்கியது இந்த
தொகை. அதேசமயம், பிரிட்டனை எடுத்துக் கொண்டால், ஒரு ஆண்டிற்கு ரூ.10 லட்சம்
முதல் ரூ.20 லட்சம் வரை செலவாகும்.
ஆஸ்திரேலியாவை எடுத்துக் கொண்டால், கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச்
செலவினம் ஆகியவற்றை உள்ளடக்கி, ஆண்டிற்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம்
வரை செலவாகிறது.
ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால், பிரிட்டனுக்கு வெளியே, ஸ்காண்டிநேவியன்
நாடுகளில் செலவினங்கள் அதிகம். இத்தகைய நாடுகளோடு ஒப்பிடுகையில்
சிங்கப்பூரின் நிலைமை, மிகவும் பரவாயில்லை என்பதுபோல் இருக்கிறது. அங்கே,
ஒரு ஆண்டிற்கு குறைந்தது ரூ.5 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை
செலவாகிறது.
விடுமுறை காலங்களில் தாய் நாட்டிற்கு வருவது செலவு குறைந்ததா?
பயணப் படியை உள்ளடக்கிய முழு உதவித்தொகை இல்லாமல், விடுமுறை காலங்களில்
சொந்த நாட்டிற்கு வந்து செல்வது செலவு வாய்ந்த ஒன்றாகவே இருக்கும்.
மேலும், ஒரு வருட காலஅளவு மட்டுமே கொண்ட படிப்பை மேற்கொள்ள வெளிநாடு
செல்வோர், இடையில் வீட்டிற்கு வர நினைப்பது புத்திசாலித்தனமல்ல. அது வீண்
அலைச்சல் மற்றும் தேவையற்ற பண விரய நடவடிக்கை.
அதேசமயம், நீண்டகால படிப்பை மேற்கொள்ள வெளிநாடு செல்வோர், இடையில்
தாய்நாட்டிற்கு வர விரும்பினால், தாய்நாட்டில் உங்களின் படிப்பு தொடர்பாக,
உருப்படியான ஏதேனும் ஒன்றை மேற்கொள்ள முடியுமா? என்று திட்டமிட்டு வரவும்.
மற்றபடி, ஒரு 2 வாரகாலம் விடுமுறை கிடைக்கிறது என்பதற்காக, தாய்நாடு
வந்து செல்வது வீண் செலவு. மேலும், விடுமுறைக்கு வந்துவிட்டு,
சம்பந்தப்பட்ட நாட்டிற்கு திரும்ப செல்லும்போது, பின்பற்றப்பட வேண்டிய
நடைமுறைகள் குறித்து தெளிவாக அறிந்து, அதன்பிறகு தாய்நாட்டிற்கு
புறப்படுவதே புத்திசாலித்தனம்.
வெளிநாட்டில் படிக்கையில், இதர நாடுகளுக்கு செல்லுதல்
ஒருவர் படிக்கும் நாட்டின் விசா விதிமுறைகளைப் பொறுத்து, இந்த
வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, நீங்கள் பிரிட்டனில் படிப்பவராக
இருந்து, Schengen விசா வைத்திருந்தால், அந்த Schengen அமைப்பிற்குள்
வரும் 26 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்.
ஸ்பெயின், நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஹங்கேரி, இத்தாலி, ஸ்வீடன் மற்றும்
சுவிட்சர்லாந்து உள்ளிட்டவை, அந்த நாடுகளில் அடக்கம். அதேசமயம், நீங்கள்
அந்த நாடுகளில் தங்கும் நாட்களின் அளவு 90ஐ தாண்டினால், நீங்கள் எந்த
நாட்டில் தங்கியிருக்கிறீர்களோ, அந்த குறிப்பிட்ட நாட்டின் விசா பெற
வேண்டும்.