புதுடில்லி: நாடு முழுவதும் மோடி அலை கடுமையாக வீசியுள்ளது; இதனால்
65 ஆண்டு கால காங்கிரஸ் ஆதிக்கம் தூக்கி எறியப்பட்டுள்ளது. 60 இடங்களைக்
கூட காங்கிரஸ் கைப்பற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதுவரை
வெற்றி பெறாத தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா போன்ற மாநிலங்களில்
பாஜ., காலூன்றியுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு தனிப் பெரும்பான்மை
பெற்றுள்ள பா.ஜ., அரசின் பிரதமராக நரேந்திர மோடி 21ம் தேதி பதவி ஏற்பார்
என தெரிகிறது.
தோல்வி கண்ட முக்கிய தலைவர்கள்:
இந்த தேர்தலில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் பெரும்பாலான அமைச்சர்கள்
தோல்வி கண்டுள்ளனர். சசிதரூர். கபில் சிபல், பரூக அப்துல்லா, சச்சின்
பைலட் போன்றவர்களும் கிரிக்கெட் வீரர் அசாருதின், பா.ஜ.,விலிருந்து விலகிய
ஜஸ்வந்த் சிங், தமிழகத்தில் வைகோ, மணி சங்கர் ஐயர், ராசா, கார்த்தி
சிதம்பரம் ஆகியோரும் தோல்வி கண்டவர்களில் முக்கியமானவர்கள்.
கடந்த ஒன்றரை மாத காலமாக நடந்து முடிந்த தேர்தல் இறுதி முடிவுகள் இன்று
வெளியாகி வருகின்றன. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நாடு முழுவதும் காலை 8
மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே நாடு முழுவதும் 325 க்கும்
மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி முன்னிலை வகித்து
வருகிறது. காங்., 70 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஏனையகட்சிகள் 100
க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அ.தி.மு.க,. 35
க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் இதற்கு அடுத்தப்படியாக மம்தா கட்சியான
திரிணாமுல் காங்., 32 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
காங்., துணை தலைவர் ராகுல் கூட பா.ஜ., வேட்பாளரை விட குறைந்த ஓட்டுக்கள்
பெற்று முன்னும், பின்னுமாக இருந்து வருகிறார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளர்
மோடி போட்டியிட்ட
வதோதரா, வாரணாசி தொகுதிகளில் பெரு வெற்றி பெற்றுள்ளார்.
எதிர்பார்த்தது
போலவே, மீடியாக்களின் கருத்துக்கணிப்பின்படி மோடி மெஜாரிட்டியுடன் ஆட்சியை
பிடிக்கிறார். நினைத்தது போலவே மோடி பிரதமராகிறார்.