பொறியியல்
கல்வி பயில விரும்பும் மாணவ,
மாணவியருக்கான
கவுன்சிலிங், வரும் ஜூன் 3ல்
சென்னையில் நடக்கிறது. பி.இ. பயில
விரும்புவோர் அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்படும்
கவுன்சிலிங் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வரும் 20க்குள்
அனுப்ப வேண்டும். இதில் குடும்பத்தில் முதல்
பட்டதாரிகளுக்கு தமிழக அரசு கல்வி
சலுகை வழங்குகிறது. கவுன்சிலிங் விண்ணப்பத்துடன் முதல் பட்டதாரி சான்றிதழையும்,
தேவையானவர்கள் இருப்பிட (நேட்டிவிட்டி) சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்
என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்
மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்
விண்ணப்பம் பெற்றுள்ளனர். அவர்களில் 60 சதவீதம் பேர் முதல்
பட்டதாரிகளாக இருப்பதால், முதல் பட்டதாரி சான்று
கோரி வருவாய்த்துறையில் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். வருவாய்த் துறையில் எத்தகைய சான்றிதழ் பெறவும்
ஒரு வாரம் வரை அவகாசம்
வேண்டியிருக்கும். பெரும்பாலான அதிகாரிகள் ஓட்டு எண்ணிக்கை பணியில்
ஈடுபட்டுள்ளதால் சான்று பெற முடியாத
சூழல் உருவாகியுள்ளது. அதனால் வரும் 20க்குள்
விண்ணப்பத்தை அனுப்ப முடியாதோ என்ற
அச்சம் மாணவ, மாணவியர் மத்தியில்
ஏற்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் வருவாய்
ஆய்வாளர் அலுவலகங்களில் பரிந்துரைத்திருந்தாலும், தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பங்கள்
தேக்கம் அடைந்துள்ளன. வழக்கம்போல் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு டோக்கன் வழங்குகின்றனர். தாராபுரம்,
காங்கயம் தாலுகாக்களில், நேற்று விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 20ம்
தேதி சான்று பெற்றுக்கொள்ளுமாறு டோக்கன்
கொடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் விண்ணப்பங்களை 20ம் தேதிக்குள் அனுப்ப
வேண்டியிருப்பதால் முதல் பட்டதாரி சான்று
கிடைக்காமல் மாணவ, மாணவியர் கவலை
அடைந்துள்ளனர்.
அவர்கள்
கூறியதாவது: பி.இ. கவுன்சிலிங்
விண்ணப்பம், 20ம் தேதி மாலைக்குள்
சென்னையை சென்றடைய வேண்டும். தாசில்தார் உள்ளிட்டோர் தேர்தல் பணியில் இருப்பதால்
சான்று வழங்க தாமதம் ஏற்படும்
என தாலுகா அலுவலகத்தில் பதில்
கூறுகின்றனர். இக்கட்டான இச்சூழலில் இளைய சமுதாயத்தின் எதிர்காலம்
குறித்தும் அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். முதல் பட்டதாரி சான்று
மற்றும் நேட்டிவிட்டி சான்று வழங்க ஒவ்வொரு
தாலுகாவிலும் இரண்டு துணை தாசில்தார்களை
நியமிக்கலாம்.
மாணவர்களுக்கு
விரைவில் சான்றிதழ் வழங்கும் வகையில் மற்ற பணிகளை
ஒத்திவைக்க வேண்டும். தேர்தல் பணிக்கு சென்றதுபோக
மீதியுள்ள துணை தாசில்தார்களை கொண்டு
முதல் பட்டதாரி மற்றும் நேட்டிவிட்டி சான்று
வழங்க சிறப்பு ஏற்பாடு செய்ய
வேண்டும். ஏழை, எளிய மாணவர்களின்
எதிர்கால நலன் கருதி மாவட்ட
நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை செய்ய
முன்வர வேண்டும் என்றனர்.
திருப்பூர்
வடக்கு தாசில்தார் அஹமதுல்லாவிடம் கேட்டபோது, "திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு
தாலுகாக்களில் அதிக மாணவர்கள் சான்றிதழ்
கோரி விண்ணப்பித்துள்ளனர். தலைமையிடத்து தனி தாசில்தார்கள் மட்டுமே
முதல் பட்டதாரி சான்று வழங்குவர். தேர்தல்
பணிக்கு செல்லாதவர்கள் தலைமையிடத்து தனி தாசில்தார்களாக பணியாற்ற
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயரதிகாரிகளின் ஆலோசனை பெற்று விரைவாக
சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்"
என்றார்.