
கடந்த செப்டம்பர் மாதம் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு, அன்னிய செலாவணி கையிருப்பு சரிவு போன்ற பல்வேறு சவால்கள் இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தன. பங்குச்சந்தைகளும் கடுமையான வீழ்ச்சியை அப்போது சந்தித்தன.
மத்திய அரசும், புதிதாக ரிசர்வ் வங்கி கவர்னராக பதவியேற்ற ரகுராம் ராஜனும் பொருளாதாரத்தை காப்பாற்ற போராடிக் கொண்டிருந்த சமயத்தில், டெல்லியைச் சேர்ந்த சாங்ஸ்கிருதி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் லைலா இந்திரா ஆல்வா என்ற பள்ளி மாணவி நாட்டின் பொருளாதார நிலை குறித்து கவலை தெரிவித்தும், அதற்காக தன்னிடம் உள்ள 20 டாலர்களை நிதியுதவியாக தருவதாகவும் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி கடிதம் அனுப்பினார்.
அதில், ''நமது பொருளாதாரம் சந்தித்து வரும் சவால்களை கேள்விப்பட்டேன். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதையும் காண்கிறேன். நான் சென்ற முறை எனது பெற்றோர்களுடன் வெளிநாடு சென்றுவிட்டு திரும்பிய போது 20 டாலர்களை சேமித்து வைத்துள்ளேன். அதை நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவியாக அளிக்க விரும்புகிறேன். நான் கொடுக்கும் இந்த சிறிய பணம் போதாது என்பது எனக்கு தெரியும்.'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை கண்டு ஆச்சர்யமடைந்த ரிசர்வ் வங்கி கவர்னர் அந்த பள்ளி மாணவிக்கு செப்டம்பர் 12 ஆம் தேதி பதில் அனுப்பினார்.
அந்த பதில் கடிதத்தில், ''உங்களுடைய கடிதம் என் மனதின் ஆழத்தை தொட்டுவிட்டது. நமது நாட்டு பொருளாதாரத்திற்கு தற்போது சவாலான நேரம் என்பதை நான் அறிவேன். ஆனால் விரைவில் நமது பொருளாதாரம் மீட்சியடையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்ற உறுதியுடன் நீ அனுப்பிய 20 டாலரை திருப்பி அனுப்புகிறேன். தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்க போதுமான அன்னிய செலாவணி கையிருப்பு ரிசர்வ்
வங்கியிடம் உள்ளது.'' என்று ரகுராம் குறிப்பிட்டிருந்தார்.
பள்ளி மாணவி அனுப்பிய கடிதம் அவர் படித்து வரும் சாங்ஸ்கிருதி பள்ளியின் மேகசைனில் நேற்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு பிறகு தற்போது நாட்டின் பொருளாதாரம் சற்று வலுப்பெற்று, ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பும் 310 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








