புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு 93,292 பேர் எழுதுகின்றனர்.இதுதொடர்பாக ஜிப்மர் இயக்குநர் டாக்டர் ரவிக்குமார் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில்
150 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு வரும்
8-ஆம் தேதி நடக்கிறது. நாடு முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜூன் 8-ஆம் தேதி காலை 10 முதல் 12.30 மணி வரை 2014-15-ஆம் ஆண்டுக்கான
ஜிப்மர் நுழைவுத்தேர்வு நடக்கிறது. 93,292 பேர் தேர்வில் பங்கேற்கின்றனர்.
கடந்தாண்டு எண்ணிக்கையை விட இது 35 சதவீதம் அதிகம். நாடு முழுவதும் உள்ள
மையங்களில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும். இயற்பியல், வேதியியல்,
உயிரியல் பாடங்களுக்கு தலா 60 மதிப்பெண்கள், ஆங்கிலத்துக்கு 20
மதிப்பெண்கள் என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும்.
ஆன்லைன் தேர்வு மாதிரிகள் இணைய தளத்தில் தரப்பட்டுள்ளன. அகில இந்திய
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வு அடிப்படையில்
இத்தேர்வு நடக்கும்.
நாட்டில் புதுச்சேரி, சென்னை, டெல்லி, கோவை, திருச்சி, நாமக்கல்,
கொல்கத்தா, சேலம், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், விஜயவாடா உள்பட 36
நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 376 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடக்கிறது.
புதுவையில் 9 மையங்களில் தேர்வு நடக்கிறது.
இதில் அதிகப்பட்சமாக போபாலில் 7,699 பேரும், ஹைதராபாத்தில் 7,321
பேரும், நாமக்கல்லில் 6,011 பேரும் தேர்வு எழுத உள்ளனர். புதுவையை
பொருத்தவரை 1,631 பேர் தேர்வு எழுத உள்ளனர் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.








