சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவம் மற்றும்
பல் மருத்துவம் (சுயநிதி) படிப்புகள், பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி
தோட்டக்கலை படிப்புகள், பிபிடி, பிஎஸ்சி நர்ஸிங், பிஃபார்ம்
படிப்புகளுக்கான ரேண்டம் எண்களை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா
புதன்கிழமை வெளியிட்டார்.
பின்னர், இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அண்ணாமலை பல்கலைக்கழக எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர
7,651 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், மாணவர்கள் 3,011, மாணவிகள் 4,640,
மாற்றுத் திறனாளிகள் 11 பேர்.
பிஎஸ்சி வேளாண்மை மற்றும் பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளில் சேர
விண்ணப்பித்தவர்கள் மொத்தம் 11,654 பேர். இதில் மாணவர்கள் 5,671, மாணவிகள்
6,037, மாற்றுத் திறனாளிகள் 36 பேர்.
பிபிடி, பிஎஸ்சி நர்ஸிங், பி.ஃபார்ம் ஆகிய படிப்புகளில் சேர மாணவர்கள்
198, மாணவிகள் 749, மாற்றுத் திறனாளிகள் 27 பேர் என மொத்தம் 947 பேர்
விண்ணப்பித்துள்ளனர்.
20-இல் ரேங்க் மற்றும் கவுன்சிலிங் பட்டியல்: பொறியியல், வேளாண்மை
மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலும், கவுன்சிலிங்
விவரங்களும் வரும் 20-ஆம் தேதி அறிவிக்கப்படும். விண்ணப்பித்தவர்களுக்கு
அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்படும். மேலும், எஸ்எம்எஸ் மூலமும் தகவல்
தெரிவிக்கப்படும்.
2014-2015-ஆம் கல்வியாண்டுக்கு எம்பிபிஎஸ் 150 இடங்கள், பிடிஎஸ் 100
இடங்கள் ஆகியவற்றிற்கான அனுமதிச் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெறும்.
பிஇ படிப்புக்கு 3,000 மாணவர்களும், பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கு
ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்சி. தோட்டக்கலை படிப்புக்கு 75 மாணவர்களும்
சேர்க்கப்படுவார்கள்.
அனுமதிச் சேர்க்கை முற்றிலும் தகுதி அடிப்படையிலும், அரசு இடஒதுக்கீடு முறையிலும் நடைபெறும் என ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பதிவாளர் என்.பஞ்சநதம், பல்கலைக்கழக மாவட்ட வருவாய்
அலுவலர்கள் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ், புல முதல்வர்கள்
ஜே.வசந்தகுமார் (வேளாண்மை), டி.வேலுசாமி (பொறியியல்), ஆர்.ராஜேந்திரன்
(கலைத் துறை), என்.என்.பிரசாத் (மருத்துவம்), மைதிலி (பல் மருத்துவம்),
தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் ஆர்.எம்.சந்திரசேகரன், கலந்தாய்வு
ஒருங்கிணைப்பாளர் டி.ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மருத்துவம் மற்றும் வேளாண்மை படிப்பில் சேர விண்ணப்பித்தவர்கள் ரேண்டம்
எண்களை அண்ணாமலை பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in என்ற
முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
50% பெண் விண்ணப்பதாரர்கள்: அண்ணாமலை பல்கலை.யில் மருத்துவம் மற்றும்
வேளாண் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள்.
பிபிடி, பிஎஸ்சி நர்ஸிங், பி.ஃபார்ம் படிப்புகளுக்கு 90 சதவீதம் மாணவிகள்
விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








