திருப்பூரில் மாணவ, மாணவியர் சிலர் டூவீலர்களில் பள்ளிக்கு வந்து
செல்கின்றனர். அவர்களில் சிலர், கண்மூடித்தனமான வேகத்தில் செல்வது
விபத்துக்கு வாய்ப்பாகிறது.பத்தாம் வகுப்பு
முடித்த மாணவ, மாணவியர் சிலருக்கு பள்ளிக்கு சென்று வர பெற்றோர் டூவீலர்
வாங்கி தந்துள்ளனர். இளம் வயது துடிப்புடன் அவர்கள், டூவீலர்களை
கண்மூடித்தனமான வேகத்தில் ஓட்டிச்செல்கின்றனர். பஸ் ஸ்டாப் மற்றும் சிக்னல்
பகுதிகளில் கூட மிதமான வேகத்தை பின்பற்றுவதில்லை.
அதிலும், ஒரே வாகனத்தில் மூன்று பேர் வரை அமர்ந்துகொண்டு
பயணிப்பது ஆபத்தாக உள்ளது. சில நேரங்களில் விபரீதம் உணராமல் ஒருவரை ஒருவர்
முந்திக்கொண்டு டூவீலர்களை அதிவேகமாக ஓட்டிச்செல்வது மற்ற வாகன
ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
மோட்டார் வாகன சட்டத்தின்படி 18 வயது நிரம்பியவர்களே
ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்று டூவீலர்களை இயக்க
வேண்டும். ஆனால், 15, 16 வயது நிரம்பிய மாணவ, மாணவியர் வாகனங்களை
ஓட்டிச்செல்வது விதிமீறல். பள்ளி சீருடையில் இருப்பதால் போக்குவரத்து
போலீசாரும் அவர்களை கண்டுகொள்வதில்லை. ஆசிரியர்களும், மாணவர்களை
கண்டிப்பதில்லை.
வசதியான பெற்றோர் தங்களது பிள்ளைகள் போக்குவரத்து
சிரமமின்றி பள்ளிக்கு வந்து செல்ல வாடகை வாகனங்களை ஏற்பாடு செய்யலாம்
அல்லது தங்களது சொந்த வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து வரலாம். டூவீலர்
வாங்கித் தரும்போது தங்களது பிள்ளையின் பாதுகாப்பை பற்றி, பெற்றோர்
சிறிதும் கவலைப்படுவது இல்லை.
போக்குவரத்து மிகுந்த நெரிசலான ரோடுகளில் அதிவேக பயணம் மிக
ஆபத்தானது என்பதை பெற்றோர் உணர வேண்டும்; தங்களது பிள்ளைகளுக்கும், உணர்த்த
வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் பள்ளிகள் உள்ள பகுதிகளில் போக்குவரத்து
போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தி, வாகனங்களை
ஓட்டிவந்த இளம்வயது மாணவ, மாணவியரை பிடித்து எச்சரித்தனர்;
பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் நேரில் வரவழைத்து அறிவுரை வழங்கினர்.
மீண்டும் அதுபோல் வாகன சோதனை நடத்தி, இளம் வயது மாணவர்கள் வாகனம் ஓட்டுவதை
தடுக்க வேண்டும்.







