வெளிநாடுகளில் பணியாற்றுவோர் குறித்து கேட்க தேவையில்லை. பெயரளவில் ஏதேனும் ப்ரெட் வகைகளையோ, சாண்ட்விச்சுகளையோ சாப்பிட்டால் போதுமானது என்ற மனோநிலையே அவர்களிடம் காணப்படுகிறது.
காலை உணவை தவிர்ப்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்று மருத்துவர்களும் உணவு நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.
இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம். அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
காலை சிற்றுண்டி உங்கள் ஒரு நாள் கலோரி தேவையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
நம்மிடையே மதிய உணவுக்கும்(லஞ்ச்), இரவு உணவுக்கும்(டின்னர்) இருக்கும் முக்கியத்துவம் காலை உணவுக்கு இல்லை. விருந்தினருக்கும் மதிய உணவு அல்லது இரவு உணவைத்தான் நாம் ஏற்பாடுச் செய்கிறோம்.ஆனால், வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் தேவை காலை உணவுதான் என்பது ஆய்வில் தெரியவருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் விஷயத்தில் காலை உணவு ரொம்ப முக்கியம்.
‘காலை உணவை தமாஷாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நமது ஊர்களில் பொதுவாக காலை உணவு இட்லி, தோசை, இடியாப்பம், உப்புமா, பொங்கல், அப்பம் போன்ற உணவுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். தவிடில்லாத அரசி மூலம் உருவாகும் இந்த உணவுகள் எவ்வாறு ஊட்டச்சத்தாக மாறும் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
உளுந்தை சேர்த்தால்தான் இட்லி ஊட்டச்சத்தாக மாறும். இதற்கு காம்பினேசனாக நார்சத்தும், வைட்டமின் சியும் அடங்கியுள்ள பச்சைக் காய்கறிகளால் தயாரிக்கப்படும் சாம்பாரை உபயோகிக்கும் பொழுது காலை உணவு தூள் கிளப்பும். ‘சாம்பார் ஈஸ் எ வெஜிடபிள் சூப்’ என்று கூறுவதுண்டு.
தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பச்சைக் காய்கறிகளின் சத்துக்கள் இணைந்த இட்லி-சாம்பார் காம்பினேசன் காலை உணவு தான் குழந்தைகளுக்கு சிறந்த காலை உணவு என்பது நிரூபணமாகியுள்ளது.








