பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக்
குறைந்து வருவதைத் தொடர்ந்து, பல்வேறு படிப்புகளை கைவிடும் நிலைக்கு
தனியார் பொறியியல் கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளன.
பி.டெக். தகவல் தொழில்நுட்பம், இசிஇ, எம்.சி.ஏ., எம்.பி.ஏ. போன்ற
படிப்புகளை கைவிட 2014-15 கல்வியாண்டில் 80-க்கும் மேற்பட்ட பொறியியல்
கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்துள்ளன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு
நடவடிக்கைகள், கல்லூரி வளாகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை
குறைந்து கல்வித் தரம் குறைந்தது ஆகியவையே இதற்குக் காரணம் என்கின்றனர்
நிபுணர்கள்.
ரூ. 5 லட்சம், ரூ. 7 லட்சம், ரூ. 10 லட்சம், ரூ. 13 லட்சம் வரை இசிஇ,
சிஎஸ்இ படிப்புகள் விலை போயிக்கொண்டிருந்த காலம் மாறி, கடந்த 2012-13,
2013-14 கல்வியாண்டுகளில் பிரபல பொறியியல் கல்லூரிகள் அண்டை
மாநிலங்களுக்குச் சென்று மாணவர்களைப் பிடித்தத் தகவலும் இப்போது
தெரியவந்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார்
கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீடு இடங்களை முழுமையாக நிரப்புவதற்காக ஆந்திர
மாநிலத்துக்குச் சென்று மாணவர்களைப் பிடித்துள்ளனர்.
இதுபோல் கோவை, ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரிகள்
கேரளத்துக்குச் சென்று மாணவர்களைப் பிடித்து வந்துள்ளனர். இதில் சில
கல்லூரிகள் வகுப்புகள் தொடங்கி ஒரு மாதத்துக்குப் பிறகுகூட நன்கொடையை
வெகுவாகக் குறைத்து மாணவர் சேர்க்கையை நடத்தியுள்ளன.
நிலைமை இப்போது மேலும் மோசமாகியிருப்பதால், பல கல்லூரிகள் படிப்புகளை
இழுத்து மூடும் நிலைக்கும், மாணவர் சேர்க்கை இடங்களை குறைக்கும் நிலைக்கும்
தள்ளப்பட்டுள்ளன. சில பிரபல கல்லூரிகள் நன்கொடை தொகையை வெகுவாகக்
குறைப்பதற்கும் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலை காரணமாக, பல்வேறு படிப்புகளை இழுத்து மூடும் கல்லூரிகளின்
எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு உயர்ந்திருப்பதாக அண்ணா
பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பி.டெக். தகவல் தொழில்நுட்ப படிப்பை கடந்த ஆண்டில் 19
கல்லூரிகள் இழுத்து மூடின. இப்போது 2014-15 கல்வியாண்டில் இந்தப் படிப்பை
இழுத்து மூட 39 கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.
இசிஇ, எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளை இழுத்து மூட
விண்ணப்பித்திருக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைக்
காட்டிலும் அதிகம் என்கின்றனர் பல்கலைக்கழக நிர்வாகிகள்.
இதுபோல் இசிஇ, சிஎஸ்இ போன்ற முக்கியப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை
இடங்களைக் குறைத்துக் கொள்ள 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இம்முறை
விண்ணப்பித்துள்ளன.
வரும் கல்வியாண்டில் மண்டலம் வாரியாக கைவிடப்படும் படிப்புகள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை விவரம்:
படிப்புகள் சென்னை கோவை திருச்சி மதுரை திருநெல்வேலி
பி.டெக். - ஐ.டி. 11 15 5 2 6
பி.இ. - சி.எஸ்.சி. 2 0 0 1 0
எம்.சி.ஏ. 12 5 1 3 1
எம்.பி.ஏ. 7 6 0 2 0
படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 240-லிருந்து 120 ஆகவும், 120-லிருந்து 60-ஆகவும் குறைக்கும் கல்லூரிகள் விவரம்:
படிப்புகள் சென்னை கோவை திருச்சி மதுரை திருநெல்வேலி
பி.டெக். - ஐ.டி. 0 2 0 0 0
பி.இ. - சி.எஸ்.சி. 5 2 1 2 1
பி.இ. - இசிஇ 3 2 1 0 0








