விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:விழுப்புரம்
நகரில் உள்ள அரசு, நிதி உதவி, நகராட்சி மற்றும் சுயநிதிப்பள்ளிகள் என
சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வேலை நேரம் ஒரே நேரத்தில்
துவங்கப்பட்டு முடிவடைவதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு
மாணவர்களுக்கு விபத்து மற்றும் இடையூறு ஏற்படுவதும் அன்றாட நிகழ்வாக
உள்ளது.
அதே நேரத்தில் அலுவலகத்திற்கு
செல்பவர்களாலும், தலைமையிடத்தில் உள்ள அலுவலகங்க ளுக்கு பொதுமக்கள்
வருவதாலும் நகரில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாணவர்களுக்கு
இடையூறு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட எஸ்பி
மனோகரன் தலைமையில் பெற்றோர், பொதுமக்கள், கல்வியாளர்கள், காவல்துறையினர்
ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி வேலை நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பாக ஆலோசனை
நடத்தி பின்னர் இறுதியாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி
நாளை (16ம் தேதி) முதல் விழுப்புரம் நகரில் பள்ளிகள் திறக்கும் நேரம்
மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரில் உள்ள அரசு, நகராட்சி
மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் காலை 9.10 மணிக்கு துவங்கி
மாலை 3.45க்கு முடிவடையும். மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், சிபிஎஸ்இ மற்றும்
சுயநிதி பள்ளிகள் அனைத்தும் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 3.35 மணிக்கு
முடிவடையும்.
பள்ளி வேலை நேர மாற்றத்திற்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்தழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







