தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப நாளுக்கு நாள் வேலையில்லா
திண்டாட்டம் என்பது வெகுவாக அதிகரித்து வருகிறது. வேலை வாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை, அதன் புள்ளிவிவரங்களை
பார்த்தாலே தலை சுற்றுகிறது. குறிப்பாக பல லட்சங்களை கொட்டி இன்ஜினியரிங்
படித்தவர்கள் 2 லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்து வருவது தெரியும்.
அதாவது 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ,
ஆசிரியர் பயிற்சி படித்து முடித்தவர்கள், இளங்கலை, முதுகலை பட்டம்
பெற்றவர்கள் என கல்வி தகுதிக்கு ஏற்ப தங்களது படிப்பை அரசின் வேலை
வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு
செய்தவர்கள் அரசு துறைகளில் காலி பணியிடங்களில் சீனியாரிட்டி அடிப்படையில்
நிரப்பப்பட்டு வருகிறார்கள். இதனால், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றது. மூன்று ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் பதிவையும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பித்து வருகின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் கடந்த 2009ம் ஆண்டு 11 லட்சத்து 96 ஆயிரத்து 982 பேர் பெயரினை பதிவு செய்து இருந்தனர். இது கடந்த 4 ஆண்டுகளில் பல மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது, 2013ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 84 லட்சத்து 38 ஆயிரத்து 439 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 43 லட்சத்து 12 ஆயிரத்து 510 பேர் பெண்கள் ஆவர்.
இளங்கலை இன்ஜினீயரிங்- 2,12,656 பேர், மருத்துவம்- 8720 பேர், வேளாண்மை கல்வியியல் - 3747 பேர், கால்நடை மருத்துவம்- 1877 பேர், இளங்கலை சட்டம்- 2796 பேரும் அடங்குவர். அதேபோல, முதுகலைப்பட்டப்படிப்பில் இன்ஜினீயரிங்- 31,168, மருத்துவம் 371, வேளாண்மை கல்வியியல்- 858, கால்நடை மருத்துவம்- 89 , சட் டம்- 321 பேர் அடங்குவர்.







