டிஎன்பிஎஸ்சி 2000ம் ஆண்டு நடத்திய குரூப் 1
தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 பேரின் பணி நியமனம் செல்லாது என்றும், அவர்களை
பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் துணை
கலெக்டர், டி.எஸ்.பி, வணிக வரித்துறை அதிகாரி உள்பட 95 பதவிகள் காலியாக
இருந்தன. இந்த காலி பணியிடங்களுக்கு 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி
அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதை தொடர்ந்து
நடந்த தேர்வில், 91 பேர் 2005ல் அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் பணி கிடைக்காத நடராஜன் உள்ளிட்ட 19 பேர், குரூப் 1 தேர்வில் முறைகேடு
நடந்ததாகவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த
வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, விசாரித்து தள்ளுபடி செய்தார். இதை
எதிர்த்து நடராஜன், மாதவன் ஆகிய 2 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை
நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், அரிபரந்தாமன் ஆகியோர் விசாரித்து அளித்த
தீர்ப்பில், விதிமுறை மீறிய 83 பேரின் விடைத்தாள்களை தவிர மற்றவர்களின்
விடைத்தாள்களை மீண்டும் தேர்வாணையம் பரிசீலனை செய்ய வேண்டும்.
புதியதாக
தேர்வு செய்து தகுதி பட்டியல் தயாரிக்க வேண்டும். விதிமுறை மீறிய 83 பேரை
தேர்வு செய்ததும். நியமனம் செய்ததும் செல்லாது. அதை ரத்து செய்கிறோம் என்று
தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து
தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் செயலாளர், தேர்வு செய்யப்பட்ட
வனிதா, அரவிந்த், பாலாஜி சரவணன், மகேஸ்வரன் உள்ளிட்டோர் உச்ச
நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த
மனுக்கள் நீதிபதிகள் அனில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிஷன்
பெஞ்சில் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதிகள்
தீர்பளித்தனர்.
அதில், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சரியான தீர்ப்பையே அளித்துள்ளது.
அரசுப் பணிக்காக தேர்வு செய்யப்படும்போது மிகவும் சரியான முறையில் தேர்வு நடத்தப்படவேண்டும்.
தேர்வு
எழுதியவர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்து வக்கீல் கமிஷன் அறிக்கை
தாக்கல் செய்ததின் அடிப்படையிலேயே உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனவே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரிதான் என்று இந்த நீதிமன்றம்
உத்தரவிடுகிறது. அப்பீல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
உச்ச
நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அவர்கள் பணியாற்ற முடியாத சூழ்நிலை
ஏற்பட்டுள்ளது. 83 பேரும் பணியில் சேர்ந்தது செல்லாது என்று உயர்நீதிமன்றம்
உத்தரவிட்ட பிறகும், இவர்களுக்கு தலா ஒரு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
கூறியும் 83 பேர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. எனவே இவர்களது பதவியை
உடனே நீக்க வேண்டும் என கூறி சென்னையை அடுத்த உள்அகரத்தை சேர்ந்த செல்வராஜ்
செல்லையா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.







