தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களில், விளையாட்டு விடுதி மற்றும்
விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர்
சுந்தர்ராஜ் கூறினார்.திருவண்ணாமலை தலைமையிடமாக கொண்டு,
ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய, மண்டல விளையாட்டு அலுவலகம், கடந்த, 1ம் தேதி
முதல், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் செயல்பட துவங்கியது.இந்த மண்டலத்தில், வேலூர், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி,
மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அலுவலகத்தை, தமிழக
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுந்தர்ராஜ் ஆய்வு
செய்தார்.
அப்போது, மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள வசதிகளை பார்வையிட்டார்.
விளையாட்டு விடுதியில் தங்கியுள்ள மாணவியரிடம், பயிற்சி மற்றும்
போட்டிகளில் பங்கேற்பு குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, அமைச்சர் சுந்தர்ராஜ், நிருபர்களிடம் கூறியதாவது: விளையாட்டு
துறை மேம்பாட்டுக்காக, நடப்பு ஆண்டில், 146 கோடி ரூபாய் நிதி
ஒதுக்கப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில், தற்போது 23
மாவட்டங்களில், விளையாட்டு விடுதிகள் உள்ளன. இதில், திருவண்ணாமலை உள்ளிட்ட
ஏழு மாவட்டங்களில், மாணவியருக்கு, விளையாட்டு விடுதி செயல்படுகிறது.
மேலும் உள்ள ஒன்பது மாவட்டங்களில், விளையாட்டு விடுதியும், மாவட்ட
விளையாட்டு அரங்கமும் விரைவில் அமைக்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை
முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார். இவ்வாறு கூறினார்.
ஆய்வின்போது, கலெக்டர் ஞானசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் புகழேந்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.







