ஆனால், என்னுடைய முடிவை நடைமுறைப் படுத்துவது அத்தனை எளிதல்ல என்பது நான் எடுத்த முடிவை வெளியில் சொன்ன பிறகே எனக்குப் புரிய வந்தது. என் உறவினர்களில் தொடங்கி நண்பர்கள் வரை எல்லோருமே என் யோசனைக்கு எதிராக இருந்தார்கள். மகள் முதல் வார்த்தையிலேயே மறுத்துவிட்டாள். “நான் பத்தாவதோட நின்னாலும் நின்னுப்போயிடுவேனே தவிர, உங்க ஸ்கூல்ல படிக்க மாட்டேன்” என்று முகத்தில் அறைந்ததைப் போலச் சொன்னாள். அரசுப் பள்ளியில் சேர்ப்பதை அவள் அவமானமாகக் கருதியதை உணர்ந்தோம். எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அரசுப் பள்ளிகளுக்கு எதிராக மாணவர்களின் மனநிலை நம் வீட்டிலேயே இப்படி இருக்கிறதே என்று எனக்கு மயக்கம் வராத குறையாகத் தலைசுற்றியது. ஆனால், மகள் மறுக்கமறுக்க நான் என்னுடைய முடிவில் உறுதியாக மாறினேன்.
கடும் பாலையைக் கடப்பதைப் போன்ற கடுமையான பத்து நாட்கள். தினம் விதவிதமான அணுகுமுறைகளில் அவளிடம் பேசி, அவளுக்குப் புரிகிற விதத்தில் பல செய்திகளைச் சொல்லி... அப்பாடா… ஒரு வழியாக அவளைச் சம்மதிக்க வைத்தோம். அரைமனதோ, முழுமனதோ ஒப்புதல்தானே முக்கியம்! பள்ளிக்கு அழைத்துச்சென்றோம். பள்ளிக்கான ஆண்டுக் கட்டணமாக 750 ரூபாயைக் கட்டியபோது எனக்கு ஒரு கணம் ஸ்தம்பித்தது. இதுவரை ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக எத்தனை லட்சங்களை எண்ணிக் கொடுத்திருக்கிறோம்?
முதல் நாள் என்னுடன் வந்தவள் அடுத்த நாள் காலையிலேயே நான் தனியாக சைக்கிளில் போகிறேன் என்று கிளம்பிவிட்டாள். “ஏன்டா?” என்றால், “உன்கூடவே வந்து போனால் பசங்க ஃபிரெண்ட்லியா இருக்க மாட்டாங்கம்மா” என்றாள். அன்று மாலை வீட்டுக்கு வந்தவுடன், “எப்படிடா இருந்தது வகுப்புகள்?” என்றேன். “ம்மா...சூப்பர்ப்மா… எல்லா டீச்சரும் நல்லா நடத்துறாங்க...” என்றாள். இதைவிட வெகுமதி வேறென்ன எனக்கு? அள்ளி அணைத்து முத்தம் கொடுத்தேன்.
இப்போது என் மகள் அரசுப் பள்ளியில் படிக்கிறாள். முதல் மகிழ்ச்சி... மேடைகளில், படைப்புகளில் வலியுறுத்தும் ஒரு விஷயத்தை நடைமுறைப்படுத்தியிருப்பது. இரண்டாவது மகிழ்ச்சி அந்தப் பள்ளி இருபாலர் பள்ளியாக இருந்தபோது என் அப்பா படித்த பள்ளி. என் அப்பா படித்த பள்ளியில், நான் படித்த பள்ளியில், நான் ஆசிரியராக இருக்கும் பள்ளியில் என் மகளும் படிக்கிறாள். மூன்றாவது மகிழ்ச்சி, அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்தவுடன் இவளைப் பார்த்து, நன்றாகப் படிக்கும் இன்னும் சில குழந்தைகளும் எங்கள் பள்ளிக்கு வருவார்கள். நிச்சயம்!








