தலித், பழங்குடியின
மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்குப் பிறகான கல்வி உதவித்தொகைத் திட்டம்
செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட
கண்காணிப்புக் குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக
தமிழக அரசின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையின் செயலாளர் கண்ணகி
பாக்கியநாதன் அண்மையில் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:
தலித், பழங்குடியின
மாணவர்கள், கிறிஸ்தவ மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஆகியோரின் கல்லூரி
படிப்புக்கு உதவி செய்யும் வகையில் மெட்ரிக் படிப்புக்குப் பிறகான கல்வி
உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, அரசு, அரசு
உதவி பெறும் கல்லூரிகளோடு, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில்
சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் மத்திய, மாநில அரசுகள்
வழங்கும். இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க மாவட்ட
கண்காணிப்புக் குழு அமைத்து ஆணையிடப்படுகிறது.
இந்தக் குழுவின்
தலைவராக மாவட்ட ஆட்சியரும், துணைத் தலைவராக மாவட்ட வருவாய் அலுவலரும்
இருப்பர். மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் குழுவின்
உறுப்பினர்-செயலராக இருப்பார். வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலன்), மாவட்ட
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர்
அல்லது உதவி கணக்கு அலுவலர், உதவியாளர் (கல்வி உதவித்தொகைப் பிரிவு)
ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இந்தக் குழுவின்
பணிகள்: கல்வி நிறுவனங்களில் இந்த கல்வி உதவித்தொகைத் திட்டம்
செயல்படுத்துவது தொடர்பாக மாதத்துக்கு குறைந்தது 10 கல்வி நிறுவனங்களை
ஆய்வு செய்ய வேண்டும்.
மாணவர் சேர்க்கையின்
போது இந்த மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனங்கள்
வசூலிக்கவில்லை என்பதை இந்தக் குழு உறுதிசெய்ய வேண்டும். அரசாணையை மீறி
இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களிடம் முன்கூட்டியே
கட்டணத்தை வசூல் செய்யும் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க
அரசுக்கு இந்தக் குழு பரிந்துரை செய்ய வேண்டும்.
தனியார்
கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அதிக அளவில்
கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதால், மாணவர்களின் கல்வி உதவித்தொகை
விண்ணப்பத்துடன் உள்ள ஜாதிச் சான்றிதழ், பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு
வருமானம் ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும் (இந்தத் திட்டத்தின் கீழ்
உதவித்தொகை பெற பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு
மிகாமல் இருக்க வேண்டும்).
தகுதியான மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உதவித்தொகை சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்.
மாணவர் சேர்க்கை
முடிந்த உடனே அனைத்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளையும் அழைத்து கல்விக்
கட்டணச் சலுகைகள், கல்வி உதவித்தொகை பெற்று வழங்குவது தொடர்பான விவரங்களை
தெளிவுப்படுத்தும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் ஆகிய பணிகள் இந்தக்
குழுவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







