துணைவேந்தர்களைத்
தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில்
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவை உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தாக்கல் செய்தார். மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள்:
துணைவேந்தர்களைப்
பதவி நீக்கம் செய்ய இதுவரை மாநில அரசுக்கு அதிகாரம் இல்லாமல் இருந்தது.
இப்போது, இந்த சட்ட மசோதா மூலமாக அந்த அதிகாரம் கிடைத்துள்ளது. ஒரு
பல்கலைக்கழகத் துணைவேந்தரை, அதன் வேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநர் தகுதி
நீக்கம் செய்வதற்கு முன்பாக, அரசின் ஆலோசனை, கருத்தைப் பெற்று செயல்படும்
நடைமுறை இந்த மசோதா மூலமாக பின்பற்றப்பட உள்ளது.
பல்கலைக்கழகங்களில்
உள்ள துணைவேந்தர்கள் தங்களது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தினர் என்பது
போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் நேர்வுகளில் அதுகுறித்து விசாரணை
செய்வதற்கு தனி நபர் நியமிக்கப்படுவார். அந்த நபர், உயர் நீதிமன்றத்தின்
நீதிபதி ஒருவராகவோ அல்லது தலைமைச் செயலாளரின் படிநிலைக்குக் குறையாத அரசின்
அலுவலராக இருக்கிற அல்லது இருந்து வருகிற நபர் ஒருவரோ விசாரணை செய்வதற்காக
நியமிக்கப்படுவர்.
இந்த விசாரணை அதிகார
அமைப்பானது, துணைவேந்தர் மீதான புகார் குறித்து அவரது முறையீட்டை பதிவு
செய்வதற்கு வாய்ப்பினை அளிக்கும். அதன் பின்பு, விசாரணை மேற்கொள்ளப்படும்.
துணைவேந்தர் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் அவை
அறிக்கை வடிவில் அரசுக்குச் சமர்ப்பிக்கப்படும்.
அந்த அறிக்கையைக்
கருத்தில் கொண்டு, தமிழக அரசானது, பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கு (தமிழக
ஆளுநர்) ஆலோசனை வழங்கும். அந்த ஆலோசனைகளின்படி, மூன்று மாதங்களுக்குள்
வேந்தர் தனது நடவடிக்கையை எடுப்பார் என்று மசோதாவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.







